முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை விதிகளைத் தளர்த்த ராமதாஸ் கோரிக்கை!

முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை விதிகளைத் தளர்த்த ராமதாஸ் கோரிக்கை!
Published on

மிழ்நாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவக் கல்வி (எம்பிபிஎஸ்) படித்தவர்கள் மட்டும்தான், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசின் ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்து படிக்க முடியும் என்ற விதியை தளர்த்த வேண்டும் என பாமக நிறுவனம் மருத்துவர் ராமதாஸ் அரசுக்குக் கோரிக்கை வைத்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவம் படித்தவர்கள் மட்டும்தான் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் (எம்டி, எம்எஸ்) உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இந்த முடிவு தமிழக மாணவர்களுக்கு நன்மை செய்வதைப் போலத் தோன்றினாலும், ஒரு பிரிவு தமிழக மாணவர்களை இது கடுமையாக பாதிக்கும்.

தமிழக மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்புகள் மற்றும் பட்டயப்படிப்பு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 6ம் தேதி வெளியிடப்பட்டது. வரும் 13ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் கெடு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாணவர் சேர்க்கைக்கான தகுதிகளில் இளநிலை மருத்துவப் படிப்பையும், கட்டாயப் பயிற்சியையும் தமிழகத்தில் மேற்கொண்டவர்கள் மட்டும்தான் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்று விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது ஒருவகையில் வரவேற்கத்தக்கது. தமிழக மாணவர்களுக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கிடைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் விருப்பம்தான் இதற்குக் காரணம் என்பது புரிகிறது. ஆனால், மருத்துவப் படிப்பில் அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்கள், புகழ் பெற்ற மத்திய மருத்துவக் கல்வி நிறுவனங்கள் உள்ள சூழலில், அவற்றில் படித்த தமிழக மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் இப்படி ஒரு முடிவை தமிழக அரசு எடுத்திருப்பது தவறானது. இந்த முடிவால் பாதிக்கப்படப்போவது தமிழக மாணவர்கள்தான். தமிழக மாணவர்களாக இருந்தாலும், அவர்கள் பிற மாநிலங்களில் இளநிலை மருத்துவம் படித்திருந்தால், அவர்களால், அவர்களின் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்ட தமிழக அரசு மருத்துவக் கல்லூரி முதுநிலை படிப்புகளில் சேர முடியாது.

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழக மாணவர்கள், அதனடிப்படையில் தில்லி எய்ம்ஸ், சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுவை ஜிப்மர் உள்ளிட்ட புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கவே விரும்புவர். அதேபோல், சிலர் குறைந்த மதிப்பெண் பெற்றாலும் அண்டை மாநிலங்களில் உள்ள மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பை படிப்பார்கள். இதில் தவறு இல்லை; அதை யாரும் குறைகூற முடியாது. பிற மாநிலங்களில் மருத்துவம் படித்தாலும், அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இளநிலை மருத்துவம் படித்து விட்டு, தமிழகத்தில்தான் அவர்கள் பணியாற்றுவார்கள். பிற மாநிலங்களில் அவர்கள் மருத்துவம் படித்தது கூட, புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும், பிற மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில்தான் இடம் கிடைத்தது என்பதாலும்தானே தவிர, தமிழகத்துக்கு எதிரான மனநிலையால் அல்ல. அதை ஏதோ தமிழகத்துக்கு இரண்டகம் செய்ததைப் போல கருதிக்கொண்டு அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்பில் சேர வாய்ப்பளிக்க மறுப்பது நியாயம் அல்ல. அது காலப்போக்கில் தமிழத்துக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழகத்தில் இளநிலை மருத்துவம் படித்தவர்கள் மட்டும்தான், தமிழக அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதுநிலை மருத்துவம் பயில முடியும் என்ற நிலை ஏற்பட்டால், வருங்காலங்களில் எய்ம்ஸ் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்தாலும் அவர்கள் அதை ஏற்க மாட்டார்கள்; அவர்களும் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலேயே இளநிலை மருத்துவம் படிக்க போட்டியிட்டால் போட்டி கடுமையாகும். நிறைவில், ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம் படிக்கும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறையும். இதனால் தமிழகத்துக்குதான் பாதிப்பு. எனவே, இந்த விதியைத் தளர்த்தி, பிற மாநிலங்களில் இளநிலை மருத்துவம் படித்த தமிழக மாணவர்களும் தமிழக அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதுநிலை மருத்துவம் பயில தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்" என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com