கைதிகளின் பல்லை உடைக்கும் காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்!

கைதிகளின் பல்லை உடைக்கும் காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்!

சின்னச் சின்னக் குற்றங்கள் செய்து கைது செய்யப்படுவோர்களின் பற்களை கருங்கற்களைக் கொண்டு உடைத்தும் பிடுங்கியும் கற்களை வாயில் போட்டு விட்டு உதடுகளிலும் கன்னத்திலும் ரத்தம் வரும் வரை தாக்கிக் கொடுமை செய்ததாக காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது சமீபத்தில் புகார் எழுந்தது.

இது சம்பந்தமாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை கருங்கற்களால் பற்களை உடைத்தும், பிடுங்கியும், கற்களை வாயில் போட்டு உதடுகளிலும் கன்னத்திலும் குருதி வரும்வரை தாக்கி இருக்கிறார் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. குற்றம் செய்தோரை மட்டுமின்றி, புகார் கொடுக்க வந்தவர்களையும் அவர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியிருக்கிறார். ஒருவர் புதிதாக திருமணமானவர் எனக் கூறியதால், அவரை உயிர்நாடியில் தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளார். தாக்கப்பட்டவர்கள் அதற்காக மருத்துவம் பெறுகின்றனர். உடல்களில் தழும்புகள் உள்ளன.

விசாரணை என்ற பெயரில் பல்வீர் சிங் அரங்கேற்றியுள்ள கொடுமைகள் மன்னிக்க முடியாதவை. மனநல பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டுமே இத்தகைய செயல்களில் ஈடுபடுவர். பல்வீர் சிங் போன்ற மனநிலை கொண்டவர்கள் காவல் துறை உயர் பதவிகளில் இருந்தால் மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது உச்ச நீதிமன்றம் வகுத்த விதிகளையும், மனிதநேயத்தையும் மதிக்காத காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அவர் மீது உடனடியாக வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com