ராமஜெயம் கொலை வழக்கு: - அதிரடிக்கு தயாராகும் சிறப்பு புலனாய்வு குழு

ராமஜெயம் கொலை வழக்கு: - அதிரடிக்கு தயாராகும் சிறப்பு புலனாய்வு குழு
Published on

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை 10 ஆண்டுகளாக பல்வேறு பிரிவு போலீசார் விசாரித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு மதன் கண்காணிப்பில் 40 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தினாலும், சிபிஐ வரை விசாரித்தும் கொலையாளிகளைப் பிடிக்க முடியாமல் விசாரணை நீண்டு வருகிறது. இந்த நிலையில், மீண்டும் திமுக ஆட்சி வந்ததும் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

ராமஜெயம் கொலை சம்பவம் நடந்தபோது திருச்சியில் முகாமிட்டிருந்த ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் திண்டுக்கல் மோகன் ராம், நரைமுடி கணேசன் உள்பட 12 பேர் இருந்தனர். இந்த பட்டியலில் உள்ளவர்களிடம் உண்மையை கண்டறியும் பரிசோதனை நடத்த திருச்சி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

குற்ற வழக்கு விசாரணைகளில் கைதேர்ந்த டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் போன்ற போலீசார் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் பங்கேற்றனர். பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு சம்பவம் நடந்த நாளில்; சம்பவம் நடந்த பகுதியில் இயங்கிய செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டு அவர்களில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தவர்களை விசாரணைக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இறுதியாக 13 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றத்தில் அனுமதிக்காகக் காத்திருந்தனர். அதில் ஒருவர் மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதிக்காததால், மீதமுள்ள திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேஷ், தினேஷ், சத்யராஜ், கலைவாணன், செந்தில், திலீப், சுரேந்தர், சாமிரவி, சிவா, ராஜ்குமார், மாரிமுத்து ஆகிய 12 பேரின் சம்மதத்துடன் கடந்த ஜனவரி 18ந் தேதி முதல் 20ந் தேதி வரை 3 நாட்கள் உண்மை கண்டறியும் சோதனையில் நிபுணத்துவம் பெற்ற தடயவியல் நிபுணர் மோசஸ் தலைமையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையின்போது ராமஜெயம் கொலை சம்பந்தமாக மட்டுமே கேள்விகள் கேட்க வேண்டும். வேறு வழக்குகள் பற்றிய கேள்விகள் கேட்கக் கூடாது. சோதனையின்போது வழக்கறிஞர்கள் உடனிருக்கவும் நீதிமன்ற அனுமதி பெற்றிருந்தனர். அதேபோன்றே கேள்விகள் தயாரிக்கப்பட்டு கேட்கப்பட்டது. கேள்விகள் கேட்கும்போது அவர்களின் பதிலில் உண்மை உள்ளதா என்பதை அவர்களின் இருதயத் துடிப்பு மற்றும் மூளையின் செயல்பாடுகளின் அளவீடுகளை வைத்து கணக்கிடப்படும். 3 நாட்களில் நடந்து முடிந்த சோதனைக்குப் பிறகு சில நாட்களுக்கு முன்பு சோதனையின் அறிக்கை வந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த உண்மை கண்டறியும் சோதனை குறித்த அறிக்கையின் விவரங்கள் வெளியாகி உள்ளது.

உண்மை கண்டறியும் சோதனையில் பங்குபெற்ற 12 ரவுடிகளில் 11 பேர் சோதனையின்போது பொய்யான தகவலை கூறியிருப்பது தெரிய வந்துள்ளது.

திலீப் என்ற ரவுடி மட்டுமே உண்மையை கூறியிருக்கிறார். உண்மை கண்டறியும் சோதனையின் அறிக்கை முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை தொடங்கும் என சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com