வாஷிங்டன்னில் எலி தொல்லை.. வேட்டையாட களமிறங்கிய பூனைகள், நாய்கள்!

வாஷிங்டன்னில் எலி தொல்லை.. வேட்டையாட களமிறங்கிய பூனைகள், நாய்கள்!
Published on

அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டன் இப்போது புதுவிதமான தொல்லை ஒன்றை சந்தித்து வருகிறது. அந்த நகரத்தில் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவற்றை கட்டுப்படுத்த வாஷிங்டன் நகர நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் எலிகளால் அவதிப்படும் ஐந்து மாவட்டங்களில் கொலம்பியா முதல் இடத்தில் உள்ளது. தற்போது தலைநகர் வாஷிங்டன்னிலும் எலிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. அங்குள்ள முக்கியமான பொழுதுபோக்கு வீதியான ஆடம்ஸ் மார்கன் நெய்பர்ஹூட் பகுதியில் உள்ள உணவகங்கள், பார்கள் உள்ளிட்ட இடங்களில் எலிகள் அதிக அளவு காணப்படுகின்றன.

அந்த எலிகள் உணவுப் பண்டங்களில் வாய் வைத்து விடுவதால் ஏராளமான உணவுப் பொருட்கள் வீணாகி வருகின்றன. எலிகளை கட்டுப்படுத்த எத்தனையோ முயற்சிகளை எடுத்தும் பலனளிக்காததால் இப்போது வாஷிங்டன் நகரில் எலிகளை வேட்டையாட முதுமையான முறை ஒன்றை கடைப்பிடிக்கிறார்கள். எலிகளை வேட்டையாட பயிற்சி அளிக்கப்பட்ட நாய்கள் மற்றும் பூனைகள் ஈடுபடுத்தப்படுகின்றன.

கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு வெளியிடங்களில் கூட்டமாக மக்கள் கூடி உணவு அருந்துவது சகஜமாகிவிட்டது. இது தான் எலிகளின் பெருக்கத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது, நகர நிர்வாகத்தின் உதவி மையத்திற்கு எலித் தொல்லை குறித்து தினமும்ஆயிரக் கணக்கான தொலைபேசி அழைப்புகள் வருவதாக செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் வாஷிங்டன் நகர தெருக்களில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் எலிவேட்டையில் ஈடுபடுவது சகஜமாகிவிட்டது. இரவு நேரங்களில் இதை ஒரு பொழுதுபோக்கு போலவே செய்து வருகிறார்கள் மக்கள். நகர்ப்பகுதிகளில் இருப்பவர்கள் மட்டுமல்ல, புற நகர்ப் பகுதிகளில் இருந்தும், ஏன் பக்கத்து மாகாணங்களில் இருந்தும் கூட பொதுமக்கள் வந்து எலிவேட்டையில் ஈடுபடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்காக அவர்கள் பயிற்சி அளிக்கப்பட்ட நாய்கள் மற்றும் பூனைகளை பயன்படுத்துகிறார்கள்.

இந்த எலிவேட்டையில் 60, 70 வயது முதியவர்ளும் கூட கலந்து கொள்கிறார்கள். எலிகளை கொல்ல மருந்துகளை பயன்படுத்துவது மனிதர்களுக்கும் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் யாருக்கும் பாதிப்பில்லாத இந்த புதிய முறையை கடைப்பிடிப்பதாக கூறுகிறார்கள் எலிவேட்டையாளர்கள்.

மனிதர்களும் நாய்களும் சேர்ந்து இந்த நகரத்தை பாழாக்கும் எலிகளை வேட்டையாடுவது உண்மையிலேயே வாஷிங்டன் நகருக்கு நன்மை செய்யும் செயலாகும் என்கிறார்கள் எலிவேட்டைக் காரர்கள். நாய்களையும், பூனைகளையும் எலிவேட்டைக்கு பயிற்சி கொடுத்து சிலர் இதை வணிகரீதியாகவும் பயன்படுத்துகிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நகரம் சுத்தமாகும் என்பதால் நகர நிர்வாகமும் இந்த முறையை ஊக்கப்படுத்துகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com