தண்ணீர் இன்றி தவிக்கும் ரேஷன் அரிசி லாரி ஓட்டுநர்கள்!

தண்ணீர் இன்றி தவிக்கும் ரேஷன் அரிசி லாரி ஓட்டுநர்கள்!
Published on

மைசூரிலிருந்து நெல்லைக்கு ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசியை ஏற்றி வந்த லாரியை கிட்டங்கியில் இறக்கி வைப்பதற்கு இடம் இல்லை என்று காரணம் சொல்லி, அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், லாரிகள் நாள் கணக்கில் வரிசையில் காத்துக்கிடக்கும் அவலம் அறங்கேறியுள்ளது. கிட்டங்கி உள்ள பகுதி காட்டுப்பகுதி என்பதால் லாரி ஓட்டுனர்கள் உணவு, தண்ணீர் இன்றி கடும் அவதிப்படுகின்றனர்.

முத்தூர் பகுதியில் அமைந்துள்ளது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிட்டங்கி. நெல்லை - கன்னியாகுமரி நான்கு வழி சாலையிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த சேமிப்பு கிட்டங்கி.

இந்தக் கிட்டங்கியில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட ரேசன் பொருட்கள் கொண்டுவரப்பட்டு சேமித்து வைக்கப்பட்டு, பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மைசூரில் இருந்து ஐந்து லாரிகளில் பச்சரிசி மூட்டை கொண்டுவரப்பட்டது. கிட்டங்கியின் உள்ளே அரிசியை இறக்கி வைக்க அதிகாரிகளின் அனுமதி கிடைக்காத நிலையில், ஐந்து லாரிகளும் அரிசி மூட்டையோடு கிட்டங்கியின் வெளியே நிறுத்தி வைத்திருந்தனர்.

கிட்டங்கி அமைந்துள்ள பகுதி காட்டுப்பகுதியாக இருப்பதால் ஓட்டுநர் மற்றும் கிளீனர் என பத்து பேர் கடந்த நான்கு நாட்களாக உணவுக்கும் குடி தண்ணீருக்கு மிகுந்த கஷ்டப்பட்டதாகவும், சாப்பிட வேண்டுமென்றால் சுமார் மூன்று கிலோ மீட்டர் வரை நடந்து சென்று தான் உணவு சாப்பிட முடியும் என்ற நிலை உள்ளதாகவும் எனவே காலை மற்றும் இரவு நேரம் மட்டுமே சாப்பிட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

கிட்டங்கிக்கு செல்லும் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் அதிக எடையுடன் அரிசி மூட்டைகளை ஏற்றி வரும் லாரிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே சாலைகளையும் மாவட்ட நிர்வாகம் சீரமைக்க வேண்டும் எனவும் ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது,

வெளிமாநிலத்திருந்து கொண்டு வரும் அரிசி, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை கிட்டங்கியின் உள்ளே இறக்கி வைக்க போதிய இடமில்லை என்றும், ஆனால் உள்ளூரில் இருந்து வரும் ரேஷன் பொருட்களை மட்டும் கிட்டங்கில் இறக்கி வைக்க அனுமதி கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

இதற்கிடையில் செய்தியாளர்கள் மூலம் இவ்விஷயம் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றதால் கிட்டங்கிக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த லாரிகளை இப்போது உள்ளே செல்ல அனுமதித்துள்ளதாகவும், ஆனால் எத்தனை நாள் கழித்து அரிசி மூட்டைகளை இறக்க அனுமதி கொடுப்பார்கள் என்று தெரியவில்லை எனவும் லாரி ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com