ரேஷன் பயனாளர்கள் கவனத்திற்கு..! மார்ச் 1 முதல் ரேஷன் ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு..!

ration shop
ration shop
Updated on

ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் மார்ச் 1 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கை அறிவித்துள்ளது. 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 1ம் தேதி 2026 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் ரேஷன் கடை பணியாளர்கள் பணியில் ஈடுபட மாட்டார்கள். ஊதிய மாற்றம், பொட்டலமாக பொருட்கள் வழங்குதல் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற உள்ளது.

சட்டசபை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு பல்வேறு சங்கத்தினரும் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அடங்கிய ஜாக்டோ ஜியோ சங்கத்தினரின் சில கோரிக்கைகளை அரசு நிறைவேற்றுவதாக உறுதி அளித்து அவர்களது போராட்டத்தை முடித்து வைத்துள்ளது. இன்னும் சில சங்கத்தினர் தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் இன்னும் தொடர்ந்து போராடிக் கொண்டு வருகின்றனர்.

ஐ.ஏ.எஸ்., குழு பரிந்துரைத்த ஊதிய உயர்வு, விற்பனையாளர்களுக்கு ரூபாய் 19,500 சம்பளம், எடையாளர்களுக்கு அலுவலக உதவியாளர் சம்பளம், பொட்டலமாக ரேஷன் பொருட்கள், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் இதில் அடங்கும். நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் உள்ள எடை தராசும், ரேஷன் கடையில் உள்ள விற்பனை முனையத்தையும் இணைத்து அதன் அடிப்படையில் சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும்.

ரேஷன் கடைகளில் ஊழியர்கள் சரியான கழிப்பறை வசதியின்றி திண்டாடுகின்றனர். கழிப்பறை கட்டித் தரப்படும் என்ற வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. முதற்கட்டமாக மாற்றுத்திறனாளி, பெண் ஊழியர்களுக்காவது கழிப்பறையை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். மேலும் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும் என்றும், இறந்த ரேஷன் கடை பணியாளர் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், பொது விநியோகத் திட்டத்தை தனித்துறையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகளை நிறைவேற்ற வற்புறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்பட உள்ளது.

தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடு வீடாகச் சென்று பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு ரேஷன் கார்டு எண்ணிக்கைக்கு ஏற்ப தொகை வழங்கப்பட்டு வருகிறது. அப்படி இல்லாமல் எடையாளர் ஊதியம், ஏற்று கூலி, இறக்கு கூலி, மினி லாரி வாடகை மற்றும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை போன்றவை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இந்த வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இது தொடர்பாக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : மூத்த தமிழக அரசியல் தலைவர் நல்லகண்ணு காலமானார்..!
ration shop
logo
Kalki Online
kalkionline.com