ரூபாய் நோட்டுகளில் சீரியல் நம்பர்களுக்கும், எழுத்துகளுக்கும் நடுவே நட்சத்திர சின்னம் இடம் பிடித்திருப்பது மற்ற நோட்டுகளைப் போன்று இயல்பானது தான் என ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.
சீரியல் நம்பர்களுக்கு நடுவே நட்சத்திர சின்னம் இருப்பது பற்றி சமூக வலைதலங்களில் சில தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஜூலை 27 அன்று, ஆர்பிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரூபாய் நோட்டுகளின் சீரியல் நம்பர் பகுதியில் முன்னொட்டுக்கும் வரிசை எண்ணுக்கும் இடையில் ஒரு நட்சத்திரக் குறியீடு சேர்க்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது
மேலும், 100 நோட்டுகள் கொண்ட கட்டில் பழுதாக அச்சிடப்பட்ட நோட்டுகளை கண்டுபிடித்து அதனை மாற்றவே இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. நட்சத்திர சின்னம் பதிக்கப்பட்ட நோட்டுகளின் காலாவதி தேதி குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ரிசர்வ் வங்கி இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய ரூபாய் நோட்டுகள் வரிசையாக எண்ணிடப்பட்டவையாக இருக்கும். ஒவ்வொன்றும் எண்கள் மற்றும் எழுத்துக்களைக் கொண்ட ஒரு தனித்துவமான வரிசை எண்ணைக் கொண்டிருக்கும். ஸ்டார் அடையாளம் உள்ள ரூபாய் நோட்டுகளும் மற்ற நோட்டுகளைப் போலவே இருக்கும். ஆனால் சீரியல் நம்பரில் முன்னொட்டுக்கும் வரிசை எண்ணுக்கும் இடையே ஸ்டார் குறியீடு சேர்க்கப்பட்டிருக்கும்.