ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து திரும்பப் பெறப்படும் ரூ.2,000 நோட்டுகளில் ரூ.2.41 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் பெறப்பட்டு விட்டதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் இது குறித்து மும்பையில் செய்தியாளா்களிடம் பேசியபோது " கடந்த மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ.3.62 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் ரூ.2.41 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் ஒரு மாதத்துக்குள் திரும்பப் பெறப்பட்டு விட்டன.
திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் 85 சதவீதமானவை வங்கி சேமிப்புக் கணக்கில் செலுத்தியதன் மூலமாகவும், 15 சதவீத நோட்டுகள் சில்லறை மாற்றியது மூலமாகவும் வங்கிகளுக்கு வந்தடைந்தன. ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டது, நாட்டின் நிதி நிலைத்தன்மையிலும் பொருளாதாரத்திலும் எந்தவித எதிா்மறைத் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து வட்டி விகிதத்தை 2.5 சதவீத அளவுக்கு ஆா்பிஐ அதிகரித்தது. மத்திய அரசும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவற்றின் பலனாக கடந்த ஆண்டு ஏப்ரலில் 7.8 சதவீதமாக இருந்த பணவீக்கம், கடந்த மே மாதம் 4.25 சதவீதமாகக் குறைந்தது.
நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 5.1 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தை நிா்ணயிக்கப்பட்ட இலக்கான 4 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆா்பிஐ தொடா்ந்து மேற்கொள்ளும்.
பணவீக்கத்துக்கும் வட்டி விகிதத்துக்கும் நேரடித் தொடா்புள்ளது. பணவீக்கம் 4 சதவீத அளவுக்குக் குறைந்தால், வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அப்போது, கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையும். உக்ரைன்-ரஷியா இடையேயான போா், பணவீக்கம் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. தற்போது சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. அது தற்போது பணவீக்கத்தில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அரிசி, கோதுமையை இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) தகுந்த நேரத்தில் சந்தைக்கு விநியோகம் செய்ததால், உணவுப் பொருள்களின் விலையில் பணவீக்கம் காணப்படவில்லை. சில பொருள்களின் மீதான வரி குறைக்கப்பட்டதும் பணவீக்கம் குறைந்ததற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
சா்வதேச அரசியல் சூழலும், பருவமழையும் பணவீக்கத்தைத் தீா்மானிப்பதில் முக்கியக் காரணியாகத் திகழ்கின்றன. நடப்பாண்டில் பருவமழை இயல்பாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், எல்-நினோ அபாயம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை எல்-நினோ சூழல் உருவானால், உணவுப் பொருள்களின் விலை அதிகரித்து பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நடப்பு 2023-24-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.5 சதவீதம் வளா்ச்சி காணும் என கணிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் கடன் வழங்கல் மதிப்பு சுமாா் 16 சதவீதம் அதிகரிக்கும். அதை ஆா்பிஐ தொடா்ந்து கண்காணித்து வருகிறது.
.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயா்த்தினாலும், இந்திய ரூபாய் மதிப்பு பெரும் பாதிப்பைச் சந்திக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.
கடந்த 2016-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ஆா்பிஐ கடந்த மே மாதம் 19-ஆம் தேதி அறிவித்தது குறிப்பிடத் தக்கது.
செப்டம்பா் 30-ஆம் தேதி வரை ரூ.2,000 நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் செலுத்திக் கொள்ளலாம் என கேடு விதிக்க பட்டிருந்தது அல்லது எந்த வங்கியின் கிளைகளிலும் கொடுத்து சில்லறையாக மாற்றிக் கொள்ளலாம் என ஆா்பிஐ அறிவித்திருந்தது.