

நாட்டின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறைகளை மேம்படுத்தவும், பாதுகாப்பானதாக மாற்றவும் இந்திய ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட ஒரு தொலைநோக்குத் திட்டம் தான் "பேமெண்ட் விஷன்' (Payments Vision). ஏற்கனவே அறிவித்து செயல்படுத்திய 'பேமெண்ட் விஷன் 2025' திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது 'பேமெண்ட் விஷன் 2028' (Payments Vision 2028) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் ஆவணத்தில் கோடிட்டு காட்டப்பட்டுள்ள 15 முக்கிய அடிப்படை வங்கி கணக்குக்கான முன்னெடுப்புகளைச் சார்ந்து 2028 டிசம்பர் 15 வரை செயலில் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் பரிவர்த்தனைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளாக பயனர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வழிகள் மீது பயனர்களுக்கு நேரடியான கட்டுப்பாட்டை வழங்குவதன் மூலம் மோசடிகளை கட்டுப்படுத்துதல் (எ.கா., UPI-க்கான உடனடி ஆன்/ஆஃப் சுவிட்சுகள்) உள்ளிட்டவைகளுடன் வாடிக்கையாளர்கள் தங்கள் செயலில் உள்ள நிலையான அறிவுறுத்தல்கள், மாதாந்திரத் தவணைகள் (EMI) அல்லது பயன்பாட்டுக் கட்டண அறிவிப்புகள் பாதிக்காமல், தங்கள் வங்கி கணக்குகளைத் தடையின்றி மாற்றிக்கொள்ள அனுமதிக்கிறது.
வாடிக்கையாளர் தனது வங்கி கணக்கு எண்ணை மாற்றாமல் மற்றொரு வங்கிக்கோ அல்லது அதே வங்கியின் வேறு கிளைக்கோ மாற்றிக் கொள்ளும் வசதிதான் வங்கி கணக்கு போர்டபிலிட்டி (Bank Account Portability) ஆகும்.
ஒரு வங்கியிலிருந்து இனி எளிதாக வேறொரு வங்கிக்கு நமது கணக்கை மாற்றிக் கொள்ளும் வசதியைத் தருகிறது இந்த திட்டம். இதனால் நமது கணக்கு எண் மாறாது, வருமானம் கணக்கு, EMI, UPI, ஓய்வூதியம் போன்ற அனைத்திற்கும் புதிய கணக்கு விவரம் கொடுக்க வேண்டிய அவசியம் குறையும்.
UPI மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்ச்சியாக இயங்கும் விதமாக Google Pay, Paytm போன்ற சேவைகளில் புதிய வங்கி இணைப்பு செய்யும் சிரமம் குறையும்.கிளை மாற்றம் எளிதாகும். பணி மாற்றம் அல்லது நகர மாற்றம் ஏற்பட்டாலும் கணக்கை எளிதாக மாற்ற முடியும்.
குறைந்த கட்டணம், அதிக வட்டி, நல்ல வாடிக்கையாளர் சேவை (Customer Service) உள்ள வங்கிக்கு மாறுவது இதனால் எளிதாகும். முக்கியமாக வங்கிகளுக்கு சென்று காத்திருப்பது, அலைக்கழிக்கப்படுவது மற்றும் வங்கிகள் கேட்கும் கேள்விகளுக்கு தடுமாறுவது போன்ற தர்மசங்கடங்கள் இனி இல்லை. வாடிக்கையாளருக்கு நேரமும் ஆவண சுமையும் குறையும்.
இருப்பினும், இத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாக வங்கி மாற முடிந்தால், வங்கிகள் தங்களின் சேவையை மேம்படுத்த முயலும். குறிப்பாக, வங்கிகளுக்கிடையே போட்டி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
ஆனாலும் நமது கணக்கை உள்ளது உள்ளபடி மற்றொரு சிறந்த வங்கிக்கு மாற்றிக் கொள்ள இந்த திட்டம் உதவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.