ஆயிரம் கோடி ரூபாயுடன் நடு ரோட்டில் நின்ற ரிசர்வ் வங்கி வாகனம்!
சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் பணம் இரண்டு கண்டெய்னர் வாகனங்களில் ஏற்றப்பட்டு, அது விழுப்புரம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தது. வாகனங்கள் இரண்டும் தாம்பரம் சானடோரியம் அருகே சென்று கொண்டு இருந்தபோது, ஒரு வாகனத்தில் திடீரென்று பழுது ஏற்பட்டு நின்று இருக்கிறது. அதைத் தொடர்ந்து பணம் ஏற்றிச் சென்ற மற்றொரு வாகனத்தையும் போலீசார் நிறுத்தி உள்ளனர்.
கோடிக்கணக்கில் பணத்தை ஏற்றிச் சென்ற வாகனங்கள் நடு ரோட்டில் நின்றதால் பரபரப்பான போலீசார், அவற்றை சானடோரியம் சித்த மருத்துவனை வளாகத்துக்குக் கொண்டு சென்று நிறுத்தி உள்ளனர். அதையடுத்து அந்த கண்டெய்னர் வாகனங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. பழுதான வாகனத்தை சீர் செய்யும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வந்தன.
இதுகுறித்து போலீசார் தரப்பில் எந்தத் தகவலையும் வெளியிட மறுத்து விட்டனர். ஆயினும், அந்த இரண்டு வாகனங்களிலும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், அவை சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து விழுப்புரம் மாவட்டத்துக்குட்பட்ட பல்வேறு வங்கி பரிவர்த்தனைகளுக்காக எடுத்துச் செல்லும்போது கண்டெய்னர் வாகனங்கள் பழுதடைந்து பாதியிலிலேயே நின்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து பணத்தை கொண்டு சென்ற கண்டெய்னர் லாரியின் பழுதை சரி செய்ய முடியாததால், இழுவை வாகனம் மூலம் அந்த வாகனத்தை மீண்டும் ரிசர்வ் வங்கிக்கே கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆயிரம் கோடி ரூபாய் பணத்தோடு நடு ரோட்டில் பழுதாகி நின்ற ரிசர்வ் வங்கி வாகனத்தால் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.