வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் ! சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா!

கொரோனா
கொரோனா
Published on

இன்று முதல் இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பெரும் தொற்று சில நாட்களாக வெகு வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து புதிதாக பரவி வரும் பிஎப் 7 ஒமிக்ரான் வகை கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாட்டில் நிலவக்கூடிய கொரோனா சூழல் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா நாடாளுமன்றத்தில் தாமாக முன்வந்து அறிக்கை அளித்தார். அப்போது பேசிய அவர், உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஒரு ஆண்டாக நோய் தொற்று குறைந்து வருகிறது.

இந்தியாவில் ஒரு நாளைக்கு 153 புதிய கொரோனா பாதிப்பு பதிவாகி வரக்கூடிய சூழ்நிலையில் உலக அளவில் இந்த நோய் தொற்று எண்ணிக்கை 5.87 லட்சமாக இருக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் நோய் தொற்றும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் கொரோனா பெரும் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடிந்தது.

இதுவரை இந்தியாவில் 220 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது உலக அளவில் ஏற்பட்டுள்ள பெரும் தொற்றின் சூழலை மத்திய சுகாதார அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. மேலும், கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை தீவிரப்படுத்துவது, பாசிட்டிவ் என்று வரக்கூடிய மாதிரிகளை மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்புவது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்து வரும் நாட்களில் பண்டிகைகள் வர இருப்பதால் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை மாநில அரசு கட்டாயமாக்க வேண்டும்.

சர்வதேச சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டவரை பொறுத்தவரை, இங்கு வருகை தரக்கூடிய அனைத்து பயணிகளையும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று முதல் தொடங்கி உள்ளது என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com