

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் கேரளா , அசாம் , புதுச்சேரி மாநிலங்களில் முன்பே தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இன்று தமிழகம் மற்றும் மே.வங்க மாநிலத்திற்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 தொகுதிக்கும் இன்றே வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் திமுக கூட்டணி , அதிமுக –பாஜக கூட்டணி , தமிழக வெற்றிக் கழகம் , நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுடன் 4 முனை பலத்த போட்டி நிலவுகிறது. சிறப்பு வாக்காளர் சீர்திருத்தப் பணிகளுக்குப்(SIR) பின்னால் நாடு முழுக்க நடைபெற்ற தேர்தல்களில் வாக்கு சதவீதம் அதிகரித்து வருகிறது. இன்று தமிழகத்தில் மொத்தப் வாக்குப்பதிவும் முடிந்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் உச்சபட்ச வாக்குபதிவாக 85.06% வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைத்துள்ளன.
இதற்கு முன்னர் 2006 சட்டமன்றத் தேர்தலில் 4,66,02,575 மொத்த வாக்காளர்களும் 70.82% வாக்குப்பதிவும் நடைபெற்றது. அதை தொடர்ந்து 2011 சட்டமன்றத் தேர்தலில் 4,71,16,217 மொத்த வாக்காளர்களுடன் 78.12% வாக்குப்பதிவு நடைபெற்றதே தமிழகத் சட்டமன்றத் தேர்தலின் சாதனை வாக்குப்பதிவாக இருந்தது.
2016 சட்டமன்றத் தேர்தலில் 5,81,95,728 மொத்த வாக்காளர்களுடன் 74.81% வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதியாக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 4,625,6553 மொத்த வாக்காளர்களுடன் 73.63% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தமிழ்நாட்டில் உச்சமாக கரூர் தொகுதியில் 93.39% வரலாறு காணாத வாக்குகளும் , குளித்தலை 92.85% , குமாரபாளையம் 92.64% , கிருஷ்ணராயபுரம் 92.49% வாக்குகளும் பெற்றுள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் , எடப்பாடி தொகுதி 91.84% வாக்குகள் பெற்று சாதனை செய்துள்ளது.
இதற்கு முன்னர் இந்த அளவிற்கு வாக்குப்பதிவு சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. மேலும் கொங்கு மண்டலத்தில் அதிக அளவில் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தர்மபுரி, சேலம் , ஈரோடு, கரூர் , நாமக்கல் மாவட்டங்களில் பல தொகுதிகளில் 90% மேல் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில் வாக்கு எந்திரங்கள், சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகின்றன. இத்துடன் 4 மாநிலங்களில் தேர்தல் திருவிழா நிறைவடைந்துள்ளது .
மே வங்கத்தில் முதற்கட்ட 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது , வரலாற்று சாதனை அளவாக அங்கு 92.45% வாக்குகள் பதிவாகியுள்ளன. மே.வங்கத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன் பின்னர் மே 4 ஆம் தேதி 5 மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணும் பணி நடைபெறும்.