இருநூறு ஆண்டுகள் பழைமையான ஐம்பத்தைந்து சிலைகள் மீட்பு; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

இருநூறு ஆண்டுகள் பழைமையான ஐம்பத்தைந்து சிலைகள் மீட்பு; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐம்பத்தைந்து பழைமையான கற்சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி முத்துராஜ் தலைமையிலான அதிகாரிகள் மீட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக சென்னை, அசோக் நகர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு செய்திகளைச் சந்தித்துப் பேசியபோது, ‘‘இந்த வீட்டின் உரிமையாளர் அமெரிக்காவில் உள்ள நிலையில், அவரது வீட்டில் அதிரடி சோதனை செய்து அதிகாரிகள் சிலைகளை மீட்டு இருக்கிறார்கள். மீட்கப்பட்ட ஐம்பத்தைந்து புராதான சிலைகளும் ஒன்பதாவது, பத்தாவது நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும். இவை அனைத்தும் கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள் என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இவற்றில் ஒரு சில சிலைகள் வட இந்தியாவை சேர்ந்தவைகளாகவும், ஒரு சில சிலைகள் தென்னிந்திய சிலைகளாகக் கூட இருக்கலாம்.

இதுவரை 301 சிலை கடத்தல் வழக்குகள் விசாரணையில் உள்ளன. இந்த சிலைகள் அனைத்தும் அந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதா என்பது ஆய்வு செய்யப்படுகிறது. இந்த சிலைகள் அனைத்தும் கலை அம்சத்துடன் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள். அரியலூர் மாவட்டம், அருள்மிகு வரதராஜன் பெருமாள் கோயில் சிலை அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்டதாகத் தெரியவந்தது. இதைத் தொடர்பு கொண்டு அந்த சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு வருவதில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து நிறைய சிலைகளைக் கொண்டு வந்தோம். 13 சிலைகளை மீட்டுள்ளோம். அதில் 12 சிலைகளை உரிய கோயில்களிடம் ஒப்படைத்து விட்டோம்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகளை ஒப்படைத்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழைமையான, தொன்மை வாய்ந்த சிலைகளை பாதுகாப்பாக வைத்துள்ளோம், போலீஸ் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமரா பாதுகாப்புடன் இவற்றைப் பாதுகாத்து வருகிறோம். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 249 சிலைகளை இணையதளத்தில் பதிவு செய்து பொதுமக்கள் பார்வைக்கு தகவலுடன் பதிவு செய்து இருக்கிறோம். எங்களது நோக்கம் இந்த சிலைகள் எந்தக் கோயிலுக்கு சொந்தமானதோ அங்கு சென்று சேர வேண்டும் என்பதுதான். இந்த சிலைகளுக்கு விலை மதிப்பு இல்லை. இப்பொழுது சுலபமாக சிலைகளைத் திருட முடியாத சூழ்நிலை இருப்பதினால் சிலை கடத்தல் தற்போது தடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோயில் சிலைகளுக்கு நல்ல பாதுகாப்பு இருக்கிறது" என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com