

கடந்த 10 ஆண்டுகளில் 238 பாரம்பரிய நினைவு சின்னங்கள், கோயில் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் கோயில்களின் சிலை திருட்டு ஏதும் நடைபெறவில்லை என்று ஒன்றிய அரசு விளக்கம்.
தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிய எழுப்பினர். அதில் இந்தியாவில் திருடப்பட்ட கோயில் சிலைகள் மீட்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மீட்கப்பட்டவையின் எண்ணிக்கை குறித்தும், மீட்கப்படாத சிலைகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஒன்றிய கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி.கிசான் ரெட்டி எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில், இந்தியாவில் 1976 முதல் 2023 ஆம் ஆண்டு வரை திருடப்பட்ட 551 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. குறிப்பாக 2014 முதல் 2023 ஆம் ஆண்டு வரை 238 புராதான பாரம்பரிய சின்னங்கள் கோயில் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் கோயில்களில் உள்ள புராதான பாரம்பரிய சாமி சிலைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் தொல்லியல் துறை உறுதி கொண்டிருக்கிறது.
சிலைகள் திருடப்பட்ட உடனே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு எடுத்து செல்வது உடனடியாக தடுக்கப்படுகிறது. மேலும் கோயில்களில் தனியார் பாதுகாப்பு படை, காவல்துறை, ஆயுதப்படை, தேவை ஏற்படும் பட்சத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
2013 முதல் 2023 ஆகிய 10 ஆண்டுகளில் கர்நாடகாவில் 14 சிலை திருடப்பட்டுள்ளது, அதில் 1 மீட்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 3 சிலை திருடப்பட்டு 2 மீட்கப்பட்டுள்ளது. பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களில் 4 சிலையும் திருடப்பட்டு இவைகளில் ஒன்றும் மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற 20 மாநிலங்களில் சிலை திருட்டு நடைபெறவில்லை.
மேலும் திருடப்பட்ட சிலைகள் வெளிநாடுகளில் இருக்கும் பட்சத்தில் இந்தியாவின் தூதரகங்கள் மூலமாக உடனடியாக திரும்பக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடத்தப்பட்டுள்ளன என்று ஒன்றிய அமைச்சர் தனது எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியுள்ளார்.