
தமிழகத்தில் எந்த வருடமும் இல்லாத வகையில் கோடைக்காலத்திலும் மழை கொட்டி வருகிறது. அதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக மழை குறைந்து, வெயில் வாட்டி வதைக்க தொடங்கிய நிலையில் தற்போது 2 நாட்களாக மழை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் வரும் 11-ம் தேதியில் இருந்து 15-ம்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி வரும் 11 அல்லது 12-ம் தேதியில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதனால் 12-ம் தேதி முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மீண்டும் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும், வரும் 13-ம் தேதி வரை சென்னையில் மழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (11-ம்தேதி) தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் அனேக இடங்களிலும், தென்மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், காற்றுடன் மிதமான மழை பெய்யும் என்றும், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
12-ம்தேதிகளில் வட மாவட்டங்களில் அனேக இடங்களிலும், தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் வரும் 14 மற்றும் 15-ந்தேதிகளில் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்து எச்சரித்து இருக்கிறது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து மக்களை குளிர்வித்தது.