காங்கிரஸ் ஆட்சியின் ரகசியங்கள் சிவப்பு டைரி மூலம் வெளிவரும்: பிரதமர் மோடி!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

‘ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியின் ரகசியங்கள் சிவப்பு டைரியின் மூலம் வெளிவரும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம், சிகார் என்னுமிடத்தில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, முதல்வர் அசோக் கெலாட் அரசை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

அப்போது, ‘காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்கள் சிவப்பு டைரியில் ஒளிந்துள்ளன. அதன் பக்கங்களைத் திறந்தால் பல ரகசியங்கள் வெளிவரும். பல பிரச்னைகள் முடிவுக்கு வரும்’ என்றும் பிரதமர் அப்போது குறிப்பிட்டார்.

‘சிவப்பு டைரி விவகாரம் வெளிவந்ததும் காங்கிரஸ் கட்சியின் பெரிய தலைவர்கள் மெளனமாகி விட்டனர். அவர்கள் வாய் திறந்து பேசாவிட்டாலும் இந்த சிவப்பு டைரி விவகாரம் அவர்களுக்குத் தேர்தலில் பலத்த அடியை வாங்கித் தரும்’ என்றும் பிரதமர் மோடி கூறினார். மேலும் அவர், ‘ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு அம்மாநில வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது’ என்றார் அவர்.

கெலாட் அரசை கடுமையாக சாடிய பிரதமர், ‘இன்று ராஜஸ்தானில் மக்கள் ஒரே குரலில் பேசுகிறார்கள். அவர் சொல்வதெல்லாம், ‘தாமரை மலர வேண்டும், தாமரை மலர வேண்டும்’ என்பதுதான். பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களை ராஜஸ்தான் மக்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இதனிடையே, பிரதமரின் சிவப்பு டைரி குறித்த பேச்சுக்கு பதிலளித்த ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், ‘பிரதமர் மோடிக்கு சிவப்பு கொடி காட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை’ என்றார்.

காங்கிரஸை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார். அதனால்தான் ராஜேந்திர குதாவை பகடைக்காயாக வைத்து பேசுகிறார். பாஜகவினர் தோல்வி பீதியால் அடிப்படையில்லாத புகார்களைக் கூறி வருகின்றனர் என்றார் கெலாட்.

‘சிவப்பு டைரி என்று ஒன்றும் இல்லை. சிவப்பு டைரி கைப்பற்றப்பட்டதாகக் கூறுவது கட்டுக்கதையாகும். அவர்கள் பேச வேண்டியது எல்லாம் சிவப்பு சிலிண்டரைப் பற்றித்தான்’ என்றார் கெலாட்.

ராஜஸ்தான் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏவான ராஜேந்திர குதா, கடந்த ஞாயிற்றுக்கிழமை சிக்கலான நேரத்தில் முதல்வர் அசோக் கெலாட்டை காப்பாற்றியது நான்தான் என்று குறிப்பிட்டிருந்தார். நான் அவரைக் காப்பாற்றாவிட்டால் அவர் சிறைக்குச் சென்றிருப்பார் என்றும் கூறி, புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார்.

காங்கிரஸ் தலைவர் தர்மேந்திர ரத்தோர் வீட்டில் அமலாக்கத்துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியபோது, முதல்வர் உத்தரவின்பேரில் அவர் வீட்டிலிருந்த சிவப்பு டைரியை எடுத்து வந்தேன். அதை எரித்துவிடுமாறு முதல்வர் என்னிடம் பலமுறை கேட்டுக் கொண்டார். அந்த டைரியில் ஒன்றும் இல்லாவிட்டால் அதை எரிக்குமாறு அவர் கூறியிருக்க மாட்டார். ஆனாலும் அதை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன் என்றார்.

பெண்களுக்கு எதிரான அத்துமீறில்கள் நடப்பதாக சட்டப்பேரவையில் பகிரங்கமாக அறிவித்ததை அடுத்து, ராஜேந்திர குதா கடந்த வெள்ளிக்கிழமை பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

முதல்வர் கேட்டுக்கொண்டிருந்தால் நான் எனது பதவியை ராஜினாமா செய்திருப்பேன். ஆனால், என்னிடம் விளக்கம் கூட கேட்காமல் முதல்வர் என்னை பதவி நீக்கம் செய்துவிட்டார் என்று ராஜேந்திர குதா கூறியிருந்தார்.

2018 சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற 6 எம்எல்ஏக்களில் குதாவும் ஒருவர். பின்னர் 2019ல் அவர் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார். இதையடுத்து அவருக்கு 2021 நவம்பரில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com