இந்தியாவில் 2024 ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற இலக்கை எட்டுவது சாத்தியமில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இதற்கு அரசு, மக்கள் உள்பட பல்வேறு காரணங்கள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவில் தெருச் சண்டை, கலவரம் மற்றும் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் இறப்பவர்களைவிட சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகும்.
2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சாலை விபத்துகளை 50 சதவீதமாக குறைக்க முடியும் என்று நாங்கள் கூறியிருந்தோம். ஆனால், அந்த இலக்கை எட்டுவது சாத்தியமில்லை என்பது தெரியவந்துள்ளது.
எங்களால் சாலை விபத்துக்களை குறைக்க முடியவில்லை. ஏனென்றால் அதில் சில குறைபாடுகள் உள்ளன. சிலர் தங்களுக்கு கொடுத்த வேலைகளை சரிவர செய்வதில்லை. இதுவும்
ஒருகாரணம் என்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
சாலைகள் அமைப்பதில் சில சீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான திட்டங்களைத் தயாரிப்பவர்கள் அது தொடர்பான அறிக்கையை ஒழுங்காக தயாரிப்பதில்லை. தரமான சாலைகள் அமைக்கவேண்டும் என்று சொன்னாலும் அதற்குரிய தொகையை செலவிடுவதில்லை. இதில் ஏதோ மிச்சம் பிடிப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.
விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும்போது சாலை பாதுகாப்பு விதிகளை கருத்தில்கொண்டு செயல்பட்டாலும் கட்டுமான பணிகளில் செலவை குறைத்துவிடுகிறார்கள். மேலும் மேம்பாலங்கள், தரைப்பாலங்கள் அமைக்க வேண்டிய இடங்களை சில சமயங்களில் தவிர்த்து விடுகிறார்கள்.
விபத்து பகுதிகளை நாங்கள் அடையாளம் காட்டுகிறோம். முக்கியமான இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்படுகிறது. இதன் மூலம் விபத்துகளை குறைக்கலாம். எந்தெந்த பாதையில் எந்த வாகனம் செல்லவேண்டும் என்று குறிப்பிடுகிறோம். இதுவும் ஒரு வகையில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வழி செய்கிறது.
ஐந்து “இ”-க்களை பின்பற்றினால் விபத்துகளை தடுக்க முடியும். என்ஜினீயரிங் (சாலை அமைத்தல்) எமர்ஜென்சி (விபத்து ஏற்பட்டால் அவசர உதவி),
என்ஜினீரியரிங் (ஆட்டோமொபைல் தொடர்பானது), எஜுகேஷன் (சாலை பாதுகாப்பை பற்றிய அறிவு, கடைசியாக என்ஃபோர்ஸ்மென்ட் அதாவது விதிகளை முறையாக பின்பற்றுவது.
நான் 9 வருடங்களாக இந்த துறையில் பணியாற்றி வருகிறேன். ஆனாலும் சாலை போடுவது மற்றும் பராமரிப்பதில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது எனது கருத்தாகும். சாலை சீரமைப்பை பற்றி நாம் பேசினால் மட்டும் போதாது. அவற்றை முறையாக செயலுக்கு கொண்டுவர வேண்டும். செலவை மிச்சம்பிடிக்கும் போக்கு மாறவேண்டும் என்றார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஐந்து லட்சம் சாலை விபத்துகள் நடக்கின்றன. இதன் மூலம் 2 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். 3 லட்சம் பேர் கை, கால்களை இழக்க நேரிடுகிறது. இந்த சாலை விபத்துகளால் நாம் 3 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியை இழக்கிறோம் என்றார் அவர்.