
தனி மனை பதிவுக்கான கட்டணம் 200 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று, பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான புதிய கட்டணங்கள் வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவண பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்தில் இருந்து ஆவண நகல்களை வழங்குதல் போன்ற சேவைகளை பொருத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் 20 ரூபாயிலிருந்து 200 ரூபாயாகவும், குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் 4ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் ஆகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச முத்திரை தீர்வை 25ஆயிரம் ரூபாயிலிருந்து 40ஆயிரம் ரூபாய் என்றும் தனி மனை பதிவுக்கான கட்டணம் 200 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவு கட்டணம் 10 ஆயிரம் ரூபாய் என்று உள்ளதை சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஒரு சதவிகிதம் எனவும் மாற்றியமைத்துள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது. பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான புதிய கட்டணங்கள் வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.