சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வெற்றிகளை மட்டுமே பாராட்டிய நமக்கு பரமக்குடி அருகே விளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் வெற்றிக்காக அவரது உறவினர்கள் சூழ கேக் வெட்டிக் கொண்டாடியது அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது. அப்படி என்னதான் மதிப்பெண் பெற்றிருந்தார் அந்த மாணவர்?
நான்குபாடங்களில் 35 ஒருபாடத்தில் 45 மதிப்பெண் களுடன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 185 மதிப்பெண்களுடன் ஜஸ்ட் பாஸ் ஆகி தேர்ச்சி பெற்றுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே விளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மலைராஜ். இவரது மகன் நவீன்கரன். பரமக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த இவர் சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இவர் அனைத்துப் பாடங்களிலும் மொத்தமாக 185 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். தமிழ் ஆங்கிலம் கணிதம் சமூக அறிவியல் ஆகிய நான்கு பாடங்களில் தலா 35 மதிப்பெண்களும் அறிவியல் பாடத்தில் 45 மதிப்பெண்களும் என மொத்தம் 185 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
மதிப்பெண்களைப் பார்த்ததும் அந்த மாணவர் மட்டுமில்லை அவரைச் சார்ந்தவர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். பின்னே? ஜஸ்ட் பாஸ் ஆகி தேர்வு பெற்று அடுத்த நிலைக்குச் செல்லும் அவருக்கு ஊக்கமளிக்கும் வகையில் வகையில் அவரது பெற்றோர் தங்கள் உணவினர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் தற்போது செம வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
நூற்றுக்கு ஒரு மார்க் குறைந்தாலே ஏன் குறைந்தது எனக் கேட்டுப் பிள்ளைகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் பெற்றோர் இருக்கும் இந்தக் காலத்தில் உறவினர் நண்பர்கள் என்று ஒன்று கூடி ஒவ்வொருவராக மாணவர் நவீன்கரனுக்கு கேக் ஊட்டி விட்டு அவரை உற்சாகப்படுத்தியது சுவாரசியமான நிகழ்வாக இருக்கிறது.
“குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் பெற்றோர்கள் மாணவர்களைத் திட்டுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. அதனால் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் ஊக்கம் தரவேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் ஜஸ்ட் பாஸ் ஆன மாணவருக்கு உறவினர்களின் இந்த உற்சாக பாராட்டு அடுத்தடுத்து வரும் தேர்வுகளில் இந்த மாணவர் இன்னும் கூடுதல் மதிப்பெண் பெற்றுத்தர உதவும் எனக் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
உண்மையில் இந்த மாணவர் சமூகத்தில் முன்மாதிரியாக வருவார். காரணம் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை உணர்ந்து குறைவான மதிப்பெண்கள் எடுத்த தங்கள் மகனைப் பாராட்டி மகிழும் தன்னம்பிக்கை பெற்றோரின் வளர்ப்பு.