உறுப்பு மாற்று சிகிச்சையில் கட்டுப்பாடுகள் தளர்வு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிரடி!

உறுப்பு மாற்று சிகிச்சையில் கட்டுப்பாடுகள் தளர்வு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிரடி!

ஒரே இந்தியா, ஒரே கொள்கை அடிப்படையில் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு தேசிய அளவில் புதிய கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. மாற்று உறுப்பு வேண்டியோ, அறுவை சிகிச்சைக்கோ இனி எந்த மாநிலத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம். உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்கு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் இனி 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும், எந்தவொரு உறுப்பு மாற்று சிகிச்சையையும் மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நோட்டோவில் (National Organ and Tissue Transplant Organisation) உள்ள விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. எந்த வயதைச் சேர்ந்த எந்தவொரு தனிநபரும் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.

உறுப்பு மாற்று சிகிச்சைக்கு குடியிருப்புச் சான்றிதழ் கட்டாயம் என்கிற முறையும் தளர்த்தப்பட்டுள்ளது. மாற்று உறுப்புகள் வேண்டி, சம்பந்தப்பட்ட மாநிலத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்கிற நிலை இருந்தது. கூடவே குடியிருப்பு சான்றிதழை இணைக்க வேண்டியது கட்டாயம் என்கிற விதியை குஜராத் போன்ற மாநிலங்கள் நடைமுறையில் வைத்திருந்தன.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம், குஜராத் உயர் நீதிமன்றம் இத்தகைய நடைமுறைக்கு தடை விதித்தது. இதன் காரணமாக மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, இனிமேல் குடியிருப்புச் சான்றிதழ் பெற தேவையில்லை என்கிற நடைமுறையை கொண்டு வந்தது. ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர் இனி மாற்று உறுப்புக்காக வேறு எந்தவொரு மாநிலத்திலும் பதிவு செய்து கொள்ள முடியும்.

கேரளா, மகராஷ்டிரா போன்ற மாநிலங்கள் மாற்று உறுப்புக்கு பதிவு செய்து கொள்ள கட்டணம் விதிக்கின்றன. ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை கட்டணம் செலுத்திய பின்னரே பதிவு செய்து கொள்ள முடியும் என்கிற நிலை இருந்தது. இனி கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

இதை எப்படி முறைப்படுத்துவது? இதையும் நோட்டோ அமைப்பு கையிலெடுத்திருக்கிறது. மாற்று உறுப்பு தேவைக்காக பதிவு செய்பவர்களுக்கு ஒரு ஐடி எண் தரப்படும். நோயாளிகள் எந்த மாநிலத்தில் எந்த மருத்துவமனையில் வேண்டுமானால் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

இது தவிர உறுப்பு மாற்று சிகிச்சையில் உள்ள தயக்கங்களை போக்குவதற்கு தேவையான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும். பள்ளிக்கூடங்களில் உறுப்பு மாற்று சிகிச்சை குறித்த பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.

நாளுக்குநாள் உறுப்பு மாற்று சிகிச்சைக்கான தேவைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த பத்தாண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்னர் தேசிய அளவில் ஐந்தாயிரம் பேர் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு விண்ணப்பத்திருந்தார்கள். கடந்த ஆண்டில் பதினைந்தாயிரம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். அடுத்து வரும் சில ஆண்டுகளில் இது பல மடங்கு உயருவதற்கு வாய்ப்புண்டு. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இத்தகைய முடிவுகளை எடுத்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com