
சர்க்கரை நோய்... இதோடு வாழும் ஒவ்வொருவர் நெஞ்சிலும் ஒரு நிமிடம் கூட நீங்காமல் இருக்கும் பயம் ஒன்று உண்டு. அது என்ன தெரியுமா? "அய்யோ! காலில் சின்னதா ஒரு காயம் வந்துவிடக் கூடாதே!" என்பதுதான்.
ஆம், ஒரு சின்ன கீறல், ஒரு கொசுக்கடி, ஒரு முள் குத்திய புண்... அவ்வளவுதான்! மற்றவர்களுக்குச் சில நாட்களில் ஆறிப்போகும் அந்தச் சாதாரண காயம், சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும் எளிதில் ஆறாமல், கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி, சீழ் பிடித்து, எலும்புகளைத் தாக்கி... இறுதியில் காலையே துண்டிக்க வேண்டிய சோகத்தில் கொண்டு சென்றுவிடுமோ என்ற கலக்கமும் பதற்றமும் ஒவ்வொரு விநாடியும் உள்ளத்தை அரிக்கிறது. இரவில் படுக்கையில் புரளும்போது, "என் கால் பத்திரமாக இருக்கிறதா?" என்று பதறிப் பார்ப்பவர்கள் பலர்.
நம்பிக்கை தரும் பேரொளி
ஆனால், இனி அந்த ஆபத்தான பயம் வேண்டாம்! அந்த இருண்ட கவலையின் மீது இப்போது பேரொளியைப் பாய்ச்சியிருக்கிறார்கள் நமது இந்திய விஞ்ஞானிகள்!
நாகாலாந்து பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், இயற்கையாகவே உணவுத் தாவரங்களில் இருக்கும் ஒரு அதிசய மூலக்கூறைக் கண்டுபிடித்துள்ளனர்.
அதன் பெயர் 'சினாபிக் அமிலம்' (Sinapic acid). இது நீரிழிவு நோயாளிகளின் புண்களை நம்ப முடியாத அளவிற்கு வேகமாக ஆற்றும் சக்தி கொண்டது என்று ஆய்வில் உறுதியாகியுள்ளது.
இது வெறும் செய்தி அல்ல... உயிரைக் காக்கும் மருந்து!
இந்தச் செய்தி, கோடிக்கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு வெறும் தகவலல்ல; இது, "அறுவை சிகிச்சை இல்லாமல் என் காலை காப்பாற்ற முடியும்!" என்ற நம்பிக்கையைக் கொண்டு வந்துள்ள ஒரு சஞ்சீவி! இது அவர்களின் முகத்திலும் உள்ளத்திலும் நிச்சயம் நிறைவான ஒரு மகிழ்ச்சியைப் பொங்க வைக்கும்.
இந்த சினாபிக் அமிலம் உடலில் உள்ள திசுக்களைச் சீர்படுத்தும் (Tissue Repair), வீக்கத்தைக் குறைக்கும் (Inflammation Control) ஒரு முக்கியமான பாதையைத் (SIRT1 Pathway) தூண்டிவிடுகிறது.
இதன் மூலம், ரத்த ஓட்டம் இல்லாத இடங்களில் கூடப் புதிய ரத்த நாளங்களை உருவாக்கி, புண்களை அதிசயத்தக்க வகையில் வேகமாக ஆற்றுகிறது.
அளவும் ஆச்சரியம், பலனும் அபாரம்!
இதுபோன்ற சிக்கலான புண்களுக்கு இப்போதிருக்கும் இரசாயன மருந்துகளால் முழுமையான பலன் கிடைப்பதில்லை.
மேலும் பக்க விளைவுகளும் ஏற்படுமோ என்ற பயமும் உள்ளது ஆனால் இந்த "சினாபிக் அமிலம் ஒரு இயற்கையான, பாதுகாப்பான தீர்வை நோக்கி நம்மை நகர்த்துகிறது," என்று ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் பிரணவ் குமார் பிரபாகர் கூறியுள்ளார்.
இந்த ஆய்வில் கிடைத்த மற்றொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால்: அதிக அளவில் மருந்து கொடுப்பதை விட, மிகவும் குறைந்த அளவே (20 mg/kg) புண்களை விரைவாக ஆற்ற உதவியுள்ளது.
இது மருந்துச் செலவையும், பக்க விளைவுகளின் அபாயத்தையும் பல மடங்கு குறைக்கும் ஒரு நல்ல செய்தி!
குறைந்த விலையில் நிவாரணம்
இந்தக் கண்டுபிடிப்பின் மிகப் பெரிய வரப்பிரசாதம் என்னவென்றால், இது இயற்கையான ஒரு வாய்வழி மருந்து என்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு கால் துண்டிக்கப்படும் அபாயத்தைக் குறைப்பதுடன், குறைந்த செலவில் எல்லா மக்களுக்கும், குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கும் எளிதாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆரம்பகட்ட பரிசோதனைகள் முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக மனிதர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகள் (Clinical Trials) தொடங்கப்பட உள்ளன.
ஆறுதல் நிறைந்த இந்த இயற்கை மருந்து, விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என நம்பி, நிம்மதிப் பெருமூச்சு விடுவோம்!