பிரபல மூளை நரம்பியல் மருத்துவரும், மதுரை எய்ம்ஸ் தலைவருமான டாக்டர். நாகராஜன் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 12.15 காலமானார். அவருக்கு வயது 76
மதுரையில் உள்ள வி.என். நரம்பியல் சிறப்பு மருத்துவமனை தலைவரான நாகராஜன் கடந்த ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். சென்னை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆற்றல்சார் பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். கர்நாடகாவின் பெங்களூர் தேசிய மனநல அகாடமி உறுப்பினராகவும் , மதுரை அரசு மருத்துவக் கல்லூரி நெறிமுறை குழு தலைவராகவும் , நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பார்மாவின் இயக்குனர் தேர்வு கமிட்டி தலைவராகவும் நாகராஜ் செயல்பட்டு வந்தார். இந்த சூழலில் மருத்துவர் நாகராஜ் இன்று அதிகாலை 12.15 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இவர் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை செயலருமான டாக்டர்.ராதாகிருஷ்ணனின் மாமனார் ஆவார்.
நள்ளிரவு 12 மணியளவில் மாரடைப்பு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையின் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் நாகராஜனின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இரங்கல் தெரிவித்துள்ள கூட்டுறவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்,
'எனது அன்புக்குரிய மாமனார் டாக்டர் வி. நாகராஜன் அவர்கள் மறைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இன்று அதிகாலை 12.15 மணியளவில் அவர் மறைந்தார். டாக்டர் வி நாகராஜன் பல சிறந்த கல்வி மற்றும் தொழில்முறை நிறுவனங்களில் முன்னணி நரம்பியல் நிபுணராகவும், நெறிமுறைக் குழுவின் தலைவராகவும், MD, DM, MNAMS, DSC, FRCP Glasgow, FACP (US) என கல்வி நிலைகளில் தேர்ச்சி பெற்றவரும் ஆவார். அவரது மறைவு எங்கள் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும் ஏற்படுத்திய இழப்பை எதுவும் ஈடுசெய்ய முடியாது' என்று தெரிவித்துள்ளார்