

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்ற பிறகு, ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் இன்று (ஜூன் 5) நடைபெற்ற நாணயக் கொள்கைக் குழுவின் முடிவுகளை சஞ்சய் மல்ஹோத்ரா வெளியிட்டுள்ளார். இதன்படி ரெப்போ ரேட் விகிதம் மாற்றமின்றி 5.25% ஆகவே தொடர்கிறது. கடந்த நிதியாண்டில் (2025-26) ரெப்போ வட்டி விகிதத்தில் 125 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்ட நிலையில், இம்முறை ரெப்போ விகிதம் நிலையாகவே இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.
அதற்கேற்ப ரெப்போ விகிதம் மாற்றமின்றி 5.25% என்ற அளவிலேயே தொடரும் என சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியன் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவில் 3 ரிசர்வ் வங்கி உறுப்பினர்கள் மற்றும் 3 வெளி உறுப்பினர்கள் என மொத்தம் 6 பேர் உள்ளனர். இந்தக் குழு தான் இந்தியப் பொருளாதாரம் சார்ந்த பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. மேலும் இந்தக் குழு உறுப்பினர்கள் தான் பணவீக்கத்திற்கு ஏற்ப ரெப்போ வட்டியில் மாற்றத்தை கொண்டு வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற 11 கூட்டங்களுக்குப் பிறகு 2025 பிப்ரவரியில் தான் ரெப்போ விகிதம் முதன்முறையாக 0.25% குறைக்கப்பட்டு 6.25% ஆக மாறியது. இதனைத் தொடர்ந்து 2025 ஏப்ரல் மாதத்தில் 0.25% குறைக்கப்பட்டு 6.0% ஆக ரெப்போ விகிதம் குறைந்தது. யாருமே எதிர்பார்க்காத வகையில் கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற நாணயக் கொள்கைக் கூட்டத்தின் போது ரெப்போ விகிதம் மேலும் 0.5% குறைக்கப்பட்டு 5.5% ஆக குறைந்தது.
அதற்கடுத்து நடந்த கூட்டத்தில் இந்த விகிதம் 5.25% ஆக குறைக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த வட்டி குறைப்பு நடவடிக்கை, வீட்டுக் கடன் வாங்கியவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இன்று நடைபெற்ற நாணயக் கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ விகிதம் மாற்றிமின்றி 5.25% ஆகவே தொடரும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ரெப்போ வட்டி மாற்றம் இன்றி தொடர்வதால் இஎம்ஐ செலுத்தும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு இது நற்செய்தியாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இஎம்ஐ அதிகரிக்காது.
புதிதாக வங்கியில் கடன் பெறுபவர்களுக்கும் வட்டி குறைவாகவே இருக்கும்.
ரெப்போ வட்டிக்கு ஏற்ப நீங்கள் இன்னும் உங்கள் கடனில் மாற்றம் செய்யவில்லை எனில், உடனடியாக வங்கியைத் தொடர்பு கொண்டு வட்டியைக் குறைக்க முயற்சி செய்யுங்கள்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here