

இந்தியாவின் 77-வது குடியரசுத் தினம் வரும் ஜனவரி 26-ஆம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு விழாவின் சிறப்பம்சமாக, 'வந்தே மாதரம்' தேசியப் பாடல் உருவானதன் 150-வது ஆண்டு கொண்டாட்டங்களும் இணைந்து நடைபெற உள்ளன.
ராணுவத்தின் வலிமை மற்றும் இந்தியாவின் கலாச்சாரப் பன்முகத்தன்மையை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் இந்த விழா அமையவுள்ளது. இதற்காக, ஜனவரி 19 முதல் 26-ஆம் தேதி வரை இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோரக் காவல் படை மற்றும் மத்திய ஆயுதப்படைகள் இணைந்து நாடு முழுவதும் பல்வேறு 'வந்தே மாதரம்' தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
விழாவின் சிறப்பம்சங்கள்:
குடியரசு தின விழாவையொட்டி விமான சாகச நிகழ்ச்சிகள், 2,500 கலைஞர்கள் பங்கேற்கும் கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகளைச் சார்ந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெறும்.
ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகியோரும் இந்த கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். அத்துடன் குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும்படி, தேச கட்டமைப்பில் பெரும் பங்காற்றிய பல்வேறு நிலைகளில் உள்ளவர்களை கௌரவிக்கும் வகையில் 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. சிறந்த புதிய கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், நாட்டுக்கு வருவாய் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்காக பணியாற்றியவர்கள் என பலரும் இதில் அடங்குவார்கள். இவர்கள் கடமை பாதையில் அமர வைக்கப்படுவார்கள். இவர்களுக்கு அவர்களுடனான தொடர்புடைய மந்திரிகளுடன் பேசுவதற்கான சந்தர்ப்பங்களும் ஏற்படுத்தித் தரப்படும். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாவையொட்டி டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பம் சார்ந்த பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கண்காணிப்புக் கருவிகள் விரிவான அளவில் பயன்படுத்தப்பட உள்ளன. அழைப்பிதழ் மற்றும் டிக்கெட் வைத்துள்ள பொதுமக்களும், சிறப்பு விருந்தினர்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி ஒத்துழைக்குமாறு டெல்லி காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.