

சென்னையில் நாட்டின் 77வது குடியரசு தின விழா இன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.அந்த வகையில் தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தேசியக் கொடியை ஏற்றினார். காலை 7.52 மணிக்கு விழா மேடைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வந்தார். அணி வணக்கம் ஏற்கும் மேடை அருகே வந்த முதல்வர் ஸ்டாலினை தலைமைச்செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். பின்னர் காலை 7.54 மணிக்கு ஆளுநர் ஆர் என் ரவி, மனைவி லட்சுமி ரவியுடன் வருகை தந்தார். அதைத்தொடர்ந்து, 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வந்த ஆளுநர் ரவியை முதல்வர் ஸ்டாலின் பசுமை கூடை ஒன்றை வழங்கி வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து, தென்னிந்திய பகுதிகளின் ராணுவ மேஜர் ஜெனரல், கடற்படை அதிகாரி, தாம்பரம் வான்படை நிலைய தலைமை அதிகாரி, கடலோர காவல்படை (கிழக்கு) கமாண்டர், தமிழக டிஜிபி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டிஜிபி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை ஆளுநருக்கு சம்பிரதாயப்படி முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். சரியாக 8 மணியளவில் கொடிக் கம்பத்தில் ஆளுநர் ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது தேசிய கீதமும் ஒலிக்கப்பட்டது. மேலும் அந்தப் பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர்கள் தூவப்பட்டன. இதன் பிறகு ராணுவ படைப்பிரிவு, கடற்படைப் பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படை பிரிவினர் அணிவகுத்து வந்து ஆளுநருக்கு வணக்கம் செலுத்தினர். ஆளுநர் ரவியும் இதனை ஏற்றுக்கொண்டார். பின்னர் ஆளுநருக்கு முப்படை அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. பல்வேறு அரசுத் துறைகளின் ஊர்திகள், அரசில் நலத்திட்டங்களை விவரிக்கும் வகையிலான வடிவமைப்புகளுடன் வலம் வந்தன. இதனை தொடர்ந்து அணி வகுப்பு மேடைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் வீர தீர செயல்கள் புரிந்தகாவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். முன்னதாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 7,500 போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு இருந்தனர். இப்பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது. குடியரசு தின விழா கொண்டாட்டங்களைக காண காலையிலேயே ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளுடன் வருகை தந்திருந்தனர். பெண்கள், சிறுமிகள் என பலரும் குடியரசு தின விழா கொண்டாட்டங்களை நேரில் கண்டு மகிழ்ந்தனர்.