நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் முக்கியமான திருத்தலமாகத் திகழ்வது திருமலை திருப்பதி கோயில். மலை மேல் அருளும் ஸ்ரீ வேங்கடாஜலபதியை தரிசிக்க இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதிலும் விடுமுறை தினங்கள், விசேஷ நாட்கள், பண்டிகைகளின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருகை தந்து பெருமாளை தரிசித்துச் செல்வது உண்டு. இதுபோன்ற நாட்களில் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் காணிக்கை பணம் மட்டும் பல கோடிக்கணக்கில் உண்டியலில் சேர்கிறது. இது தவிர, பக்தர்கள் நகை மற்றும் வெளிநாட்டுப் பணம் போன்றவற்றையும் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்துவது உண்டு.
அதேபோல், கோயில் தேவஸ்தான நிர்வாகமும் தரிசனத்துக்காக வருகை தரும் பக்தர்களுக்கு சாப்பாடு, பால், பிஸ்கெட் போன்றவற்றை வழங்குவதோடு, தரிசனம் முடித்து அவர்கள் செல்கையில் லட்டு பிரசாதம், பொங்கல் போன்றவற்றையும் கோயில் கவுண்டர்களில் வழங்கி வருகிறது.
கோயிலின் கணக்கு வழக்குகளை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கவனித்து வருகிறது. பக்தர்கள் மூலம் காணிக்கையாக பெறப்படும் வெளிநாட்டு பணத்தை ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்வதற்கு முன் அதற்கான உரிய விளக்கத்தை கோயில் நிர்வாகம் அளித்த பின்னரே வெளிநாட்டு பணம் இந்திய பணமாக மாற்றப்படும். இந்நிலையில் சமீப நாட்களாக வெளிநாட்டுப் பணத்துக்கு திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் குறிப்பிட்ட யாரையும் குறிப்பிடாமல், பொதுவாக பக்தர்கள் மூலம் காணிக்கையாகக் கிடைக்கப்பெற்றது என விளக்கம் மட்டும் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் இந்த சரியில்லாத விளக்கத்தை சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளாத ரிசர்வ் வங்கி, ‘கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் மூலம் காணிக்கையாகப் பெறப்படும் பணத்துக்கு சரியான கணக்கில்லை’ எனக் கூறியதோடு, மூன்று ஆண்டுகள் திருப்பதி கோயிலின் டெபாசிட் செய்யும் அனுமதியையும் நிறுத்தி வைத்துள்ளது. அதோடு, தேவஸ்தானத்துக்கு மூன்று கோடியே இருபத்து ஒன்பது லட்சம் ரூபாயை அபராதமாகவும் விதித்துள்ளது பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.