கடன் விதிகளை கடுமையாக்கிய ரிசர்வ் வங்கி.. வட்டி உயர வாய்ப்பு!

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

தனிநபர் கடன் மீதான விதிகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கியதால், அவற்றுக்கான வட்டி மற்றும் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளது.

முந்தைய காலங்களில் பேங்குகளுக்கு சென்று லோன் வாங்குவார்கள். தற்போதும் அது நடைமுறையில் இருந்தாலும் டிஜிட்டல் உலகத்திற்கு ஏற்றவாறு பலரும் கிரெடிட் கார்டுகள் மூலம் கடன் காரர்களாக வாழ்கின்றனர். அப்படி நமது தேவைக்கு ஏற்ப அனைவரும் கடன் வாங்குவது வழக்கம். ஆனால் தனி நபர் வாங்கும் கடன் மீதான விதிகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கியுள்ளது.

வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் தனிநபர் கடன்கள் ஒவ்வொரு ஆண்டும் 25 சதவீதம் அதிகரித்து வருவதாகவும், கிரெடிட் கார்டுகளின் நிலுவைத்தொகை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும் ரிசர்வ வங்கி குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்பற்ற கடன்கள் அதிகரிப்பதால், தனிநபர் கடன்களுக்கான ரிஸ்க் வெயிட்டேஜ் புள்ளிகளை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. அதன்படி, ரிஸ்க் வெயிட்டேஜ் புள்ளிகள் 100 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால், வங்கிகள் ஒவ்வொரு 100 ரூபாய் கடனுக்கும் 9 ரூபாயை மூலதனமாக பராமரிக்க வேண்டியிருந்த நிலையில், தற்போது 11 ரூபாய் 25 காசுகளை வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிகளுக்கு அதிகரிக்கும் சுமையை குறைக்க தனிநபர் கடன் வழங்குவதற்கான கட்டணங்களையும், வட்டி விகிதங்களையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும், தனிநபர் கடன் பெறுவதற்கான நடைமுறைகளும் கடுமையாக்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், வீடு, வாகனம் மற்றும் கல்விக் கடன்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் பொருந்தாது எனவும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com