பா.ஜ.க அரசைக் கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்!

பா.ஜ.க அரசைக் கண்டித்து  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்!

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியினுடைய சட்டமன்ற குழு தலைவருமான செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் அதில், அண்ணல் அம்பேத்கர் தலைமையில் இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அட்டவணை ஒன்றின் கீழ் ஒன்றிய அரசிற்கும், அட்டவணை இரண்டின் கீழ் மாநில அரசிற்கும் சட்டங்கள் இயற்றி அவற்றை அமல்படுத்துவதற்கான உரிமைகள் உள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 32வது பிரிவு டாக்டர் பி.ஆர். அம்பேத்கரால் இந்திய அரசியலமைப்பின் 'இதயம் மற்றும் ஆன்மா' என்று விவரிக்கப்பட்டுள்ளது. ஏன் என்றால் எந்த ஒரு தனி மனிதனின் அடிப்படை உரிமைகளை மீறக்கூடாது என்ற காரணத்தினால் உருவாக்கப்பட்டது.

ஆனால் இன்றைய  பா.ஜ.க. அரசாங்கமோ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மாவான 32 வது பிரிவை சாகடிக்கும் நோக்கில் தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள அதிகார அமைப்புகளான அமலாக்கத்துறை,  வருமானவரித் துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றை எதிர்கட்சியினரை பழிவாங்குவதற்கு பயன்படுத்துகிறது. 

பா.ஜ.க.வை எதிர்க்கின்ற அனைத்துக் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது.  பா.ஜ.க.வின் துணை அமைப்புகள் போன்று அமலாக்கத்துறையும், சிபிஐயும் இயங்குகிறது. அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி பா.ஜ.க.வினரை எதிர்த்து கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  

தமிழ்நாட்டில் சமீபத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் அடுத்தடுத்து அமலாக்கத்துறையினர் சோதனை, விசாரணை என்ற பெயரில் மிகுந்த மனஉளைச்சலையும் உடல் நலக்குறைவையும்  ஏற்படுத்தியுள்ளனர். விசாரணை அமைப்புகளை ஏவி, பாசிசப் போக்குடன் செயல்படும் ஒன்றிய அரசை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இதுபோன்ற நடவடிக்கைகளால் தி.மு.க.வை மிரட்டி பணிய வைக்கப் பார்க்கின்றது ஒன்றிய அரசு. ஆனால், அது ஒருபோதும் நடக்காது. 

தமிழ்நாட்டில் இருக்கும் ஆளுநரோ, ஊழலற்ற அரசு அமைய வேண்டுமென்று பேசிக் கொண்டு, ஊழல் செய்த அமைச்சர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார். 

கடந்த ஒன்பது ஆண்டுகளில் 3,500-க்கும் அதிகமான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியிருக்கிறது. இதில் ஆயிரம் வழக்குகளில்கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பதும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. 50 தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் மீதுகூட இன்னும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. தண்டனை பெற்றவர்கள் 30 பேர்கூட இல்லை. எனவே, பாஜக ஆட்சியில் நடைபெறும் சோதனைகளின் நோக்கத்தை கேள்விக்குட்படுத்துவது அவசியமாக இருக்கிறது. 

விசாரணை அமைப்புகளை ஏவி, எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் நோக்கத்தோடு எதேச்சதிகாரமாக செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டிக்கும் விதமாக தமிழ்நாட்டின் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி, ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வரவேண்டும். இவ்வாறு செல்வப்பெருந்தகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com