நாளை மகர ஜோதி - பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு..!
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காகக் கடந்த நவம்பர் 16-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் மண்டல காலம் முடிந்து, டிசம்பர் 27-ஆம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்ததும் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மகர விளக்கு உற்சவத்திற்காக டிசம்பர் 30-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தொடர்ந்து ஐயப்ப தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சிகர நிகழ்வான மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நாளை (ஜனவரி 14) நடைபெற உள்ளது.
நாளை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி இ.டி. பிரசாத் நம்பூதிரி ஆகியோர் தலைமையில் மகர சங்கராந்தி பூஜைகள் நடைபெற உள்ளன. பந்தள அரண்மனையில் இருந்து புறப்பட்ட திருவாபரணப் பெட்டி, நாளை மாலை 6:15 மணி அளவில் சன்னிதானத்தை வந்தடையும். மாலை 6:40 மணிக்குத் திருவாபரணங்கள் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெறும். தீபாராதனை முடிந்த சில நொடிகளிலேயே பொன்னம்பல மேட்டில் மகரஜோதி மூன்று முறை தரிசனம் காணக் கிடைக்கும்.
மகர விளக்கு தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் மலையிலேயே ஆங்காங்கு முகாமிட்டு வருவதால் சபரிமலையில் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி
நாளை காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் பம்பையிலிருந்து சன்னிதானத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
மகரஜோதி தரிசனத்திற்குப் பின்னரே பக்தர்கள் மீண்டும் 18-ஆம் படி வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இன்று தரிசனத்திற்கு 45,000 பேரும், நாளை 30,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
நாளை திருவாபரணப் பெட்டி ஊர்வலமாக வரும் பாதையில் பக்தர்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மகரஜோதி தரிசனம் செய்ய பெரிய பாதை வழியாக வரும் பக்தர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிகளுக்குள் உணவு சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மகரஜோதியை தரிசிக்க உயரமான மரங்களின் மீது ஏறுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுடைய பாதுகாப்பிற்காக பம்பையில் இருந்தே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது
போலீசார் அனுமதித்துள்ள இடங்களைத் தவிர பிற இடங்களில் பக்தர்கள் கூடாரம் அமைக்கவோ, ஓய்வெடுத்து தங்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பக்தர்கள் சமையல் செய்ய கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்தக் கூடாது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் அனுமதித்த இடங்களில் இருந்து மட்டுமே பக்தர்கள் மகரஜோதியை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

