“2024-ல் ஓய்வு” நடால்!

மும்பை பரபர!
“2024-ல் ஓய்வு” நடால்!

ண்கள் ஒற்றையர் பிரிவில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று மகத்தான சாதனை வீரராகத் திகழும் 36 வயதாகிய நடால்,  இந்த வருட தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி சமயம், இடுப்பு பகுதியில் காயமடைந்தார். நீண்ட ஓய்விற்குப் பிறகும் முழு உடல் தகுதி பெற முடியாமல் தவித்ததால், பல போட்டிகளில் இருந்து தொடர்ச்சியாக விலக நேர்ந்தது.

களிமண் தரை மைதானத்தில் நடக்கும் பிரெஞ்சு ஓபனில் 14 முறை சாம்பியன் பட்டம் பெற்றவர். உடல் நலம் சரியில்லாத காரணம், மே 28ஆந் தேதி தொடங்கவிருக்கும் பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் 2024 சீசனே, தான் விளையாடும் கடைசி சீசனாக இருக்குமென்றும், அதன் பிறகு டென்னிஸ் போட்டி களிலிருந்து ஓய்வு பெறப் போவதாகவும் நடால் தெரிவித்துள்ளது. ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம்தான்.

(காலம் மாறும். காத்திருப்போம்! மீண்டும் மனது மாறி வருவார் நடால்!)

தேவை லைசென்ஸ்!

செல்லப் பிராணியான நாய்களை வீடுகளில் வளர்ப்பதற்கு முறையான லைசென்ஸ் பெற வேண்டுமென்பது சுகாதாரத்துறையின் கட்டுப்பாடாகும். புனே மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருக்கும்  1½ லட்சம் நாய்களில், இதுவரை 1,576 உரிமையாளர்கள் மட்டுமே தங்களது செல்லப் பிராணிக்கு லைசென்ஸ் வாங்கியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“வளர்ப்பு நாய்களுக்கு வருடாந்திர லைசென்ஸ் பெற வேண்டியது அவசியமாகும். மேலும், அதன் உரிமையாளர்கள் ரேபிஸ் தடுப்பூசிக்கான சான்று, முகவரி, நாயின் புகைப்படம், வரி செலுத்திய ரசீது மற்றும் தடையில்லாச் சான்றிதழ் உள்பட பல்வேறு ஆவணங்களை சுகாதாரத் துறையில் சமர்ப்பிக்க வேண்டும்” என சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

நாய் உரிமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், நாய்களுக்கான லைசென்ஸ் பெற முழு செயல் முறையையும் ஆன்லைனில் கடந்த நவம்பர் முதல் தொடங்கி இருக்கிறது. இருப்பினும், உரிமையாளர்கள் அதில் அக்கறை எடுக்காதது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறதெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணம், “இனிமேல் லைசென்ஸ் இல்லாத நாய்களை, அவற்றின் வளாகத்திற்கு வெளியிலோ அல்லது பொதுவிடங்களுக்கோ அழைத்துச் செல்லக்கூடாது. அக்கம் பக்கத்தினர்கள் புகார் கொடுக்கையில்தான் செல்லப் பிராணிகளுக்கு லைசென்ஸ் இல்லையென்பது தெரியவரும்.

அவ்வாறு லைசென்ஸ் பெறாதவர்களுக்கு ரூபாய் 500/- அபராதம் மற்றும் நோட்டீஸ் அனுப்பப்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(செல்லப் பிராணிகளுக்காக எத்தனையோ செலவு செய்பவர்கள், லைசென்ஸ் வாங்கலாம்.)

அபிஷேக் பச்சனின் அறிவுரை!

பாலிவுட் நடிகர் விக்கி கெளஷலும், நடிகை கத்ரீனா கைஃபும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். விக்கி கெளஷலும், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும் சேர்ந்து ‘மன்மர்சியான்’ படத்தில் நடித்ததில் இருந்து இருவருக்கு மிடையே நல்ல நட்பு இருக்கிறது. திருமண வாழ்க்கை குறித்து அபிஷேக் பச்சன், விக்கி கெளஷலுக்கு வழங்கிய அறிவுரை விபரம் என்ன?

“என்ன பிரச்னையாக இருந்தாலும் நான் ஐஸ்வர்யா ராயிடம் முதலில் மன்னிப்பு கேட்பேன். படுக்கச் செல்லும் முன்பும் காலையில் எழுந்ததும் “ஸாரி” சொல்லி விடுவேன். படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு பிரச்னைகளைத் தீர்த்துவிடுவது நல்லது. இல்லையெனில் அதையே நினைத்து கோபத்தில் தூக்கம் வராது” என்பதாகும்.

தவிர, கெரியரை பொருத்தமட்டில் சாரா அலிகானுடன் சேர்ந்து ‘ஜரா ஹட்கே!

ஜரா பச்கே!’ என்கிற படத்தில் விக்கிகெளஷல் நடித்துள்ளார். படத்தில் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமயம் செய்தியாளர் ஒருவர் விக்கிகெளஷலிடம் கேட்ட கேள்வியும், கெளஷல் அளித்த பதிலும் பலரையும் கவர்ந்துவிட்டது. அதாவது “நம் நாட்டில் திருமணங்கள் கடைசிவரை நிலைத்து நிற்கும். அதை ஒப்புக் கொள்கிறீர்களா? இல்லை. உங்கள் மனைவி கத்ரீனா கைஃபைவிட சிறந்த ஒருவரைப் பார்த்தால், அவரை விவாகரத்து செய்து விடுவீர்களா?

சிரித்தவாறே விக்கிகெளஷல் கூறிய பதில், “சார்! மாலையில் நானும் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும். நான் இன்னும் சிறுபிள்ளைதான். கொஞ்சம் வளர விடுங்கள். பயங்கரமான, ஆபத்தான கேள்வி கேட்டிருக்கிறீர்கள். இதற்கு எப்படி பதில் சொல்ல முடியும்? எல்லாப் பிறவியிலும் ஒன்றாக இருப்போம்” என்றார்.

(காதல் மனைவி மீது அதீத பாசம்!)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com