அறுவடை நேரத்தில் நெற்பயிர்கள் நாசம் ! டெல்டா விவசாயிகள் கதறல்!

அறுவடை நேரத்தில் நெற்பயிர்கள் நாசம் ! டெல்டா விவசாயிகள் கதறல்!
Published on

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவு முதலே கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கர் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் கனமழை காரணமாக நெல் பயிர்கள் சாய்ந்தன. மேலும் தொடர்ந்து மழை பெய்தால் பல்லாயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் மழை நீரில் முற்றிலும் சாயக்கூடிய நிலை உருவாகியுள்ளது என விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

இதே போன்று நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.பொதுவாக மார்கழி மாதத்தில் மழை இருக்காது. அறுவடைக்குத் தயாராகும் நெற்பயிரை, தை பொங்கலுக்கு முன்பாகவோ, அதற்குப் பிறகோ அறுவடை செய்யலாம் என மிகுந்த நம்பிக்கையில் இருந்தார்கள் விவசாயிகள் .

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர் செய்யப்பட்டிருந்த லட்சக்கணக்கான ஏக்கர் சம்பா நெற் பயிர்கள், தொடர் கன மழையின் காரணமாக, கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. பொங்கல் திருநாள் கொண்டாட்டத்துக்கு விவசாயிகள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு இவர்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மழை விட்டாலும் இனி தங்களது நெற்பயிர்களைக் காப்பாற்றுவதற்கு வாய்ப்பில்லை எனவும், இதனால் தாங்கள் கடுமையான நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனையோடு தெரிவிக்கிறார்கள்..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com