அரிசி விலை கடும் உயர்வு : அரிசிக்கு ஜிஎஸ்டி வசூலிக்க வியாபாரிகள் எதிர்ப்பு!

அரிசி விலை கடும் உயர்வு : அரிசிக்கு ஜிஎஸ்டி வசூலிக்க வியாபாரிகள் எதிர்ப்பு!
Published on

நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை மலைப் போல் உயர்ந்து இருப்பதால் ஏழை எளிய சாமானிய மக்கள் மிகப்பெரிய இன்னலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். மக்கள் தற்போது சந்திக்கக்கூடிய மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக விலைவாசி உயர்வு பார்க்கப்படுகிறது. அதிலும்  அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பருவநிலை மாற்றம், வட மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழை, தென் மாநிலங்களில் போதிய மழை இல்லாததால் ஏற்பட்டுள்ள விளைச்சல் பாதிப்பு என்று பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் விவசாய விளைச்சல் குறைந்து பல்வேறு வகையான உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இப்படி காய்கறிகள், மளிகை பொருட்கள் கடந்த இரண்டு மாதங்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக தக்காளி, துவரம் பருப்பு தொடங்கி தற்போது அரிசி வரை பல உணவு பொருட்கள் மீது தொடர் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் அரிசியினுடைய இருப்பு குறைந்ததாலும், விளைச்சல் பாதிக்கப்பட்டதாலும் இந்திய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி இல்லாத பிற அரிசிகளுக்கான ஏற்றுமதிக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அரிசிக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அரிசி கிலோ 10 ரூபாய் விலை உயர்வு உயர்ந்துள்ளது.

இவ்வாறு பேக்கிங் செய்யப்பட்ட அரிசி மூட்டைகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதே சமயம் வியாபாரிகள் பேக்கிங் செய்யாமல் அரிசிகளை விற்பனை செய்ய முயற்சி எடுத்தனர். இந்த நிலையில் பேக்கிங் செய்யப்பட்ட அரிசிகளை விற்பனை செய்வதற்கு வியாபாரிகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது அரிசி கிலோவிற்கு 8 முதல் 10 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.

குறிப்பாக முதல் ரக அரிசி 25 கிலோ மூட்டை 1400 ரூபாயில் இருந்து 1600 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. 2ம் ரக அரிசி 25 கிலோ மூட்டை 1200 ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், இட்லி அரிசி 850 யில் இருந்து 950 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. இது மக்களை மேலும் சுமைக்கு உள்ளாக்கி உள்ளது. அதே நேரம் வியாபாரிகள் அரிசிக்கு ஜிஎஸ்டி கொண்டு வந்துள்ளதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com