

நம் அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத ஓர் உணவு என்றால் அது அரிசி தான். சோறு, இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம் என்று தொடங்கி முறுக்கு, அதிரசம் எனப் பல உணவுகள் அரிசியை பிரதானமாக கொண்டவை. இந்தியாவின் 60 சதவிகித மக்கள் சாப்பிடக்கூடிய உணவுப்பொருளாக இப்போதும் அரிசி இருந்து வருகிறது. சாப்பாட்டு அரிசி, புழுங்கல் அரிசி, இட்லி அரிசி, பச்சரிசி என பலவிதமாக அரிசியை பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவின் 60 சதவீத மக்களின் பிரதான உணவுப் பொருளாக விளங்கும் அரிசி, தற்போது சாமானிய மக்களின் பட்ஜெட்டை பதம் பார்க்க தொடங்கியுள்ளது.
தமிழகத்தின் ஆண்டு அரிசி தேவை 91 லட்சம் டன்னாக உள்ள நிலையில், இங்கு 75 லட்சம் டன் மட்டுமே உற்பத்தியாகிறது. இதில் 5 லட்சம் டன் கேரளாவுக்கு அனுப்பப்படுவதால் ஏற்படும் 21 லட்சம் டன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, தமிழகம் எப்போதும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அரிசி வரவழைக்கப்படுகிறது.இந்நிலையில், நடப்பாண்டு கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. இதனால் சன்னரக நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பதால் தமிழகத்துக்கான நெல் வரத்து குறைந்துள்ளது என்றும் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நடப்பு ஆண்டில் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் எதிர்பார்த்தபடி பருவமழையும் கோடை மழையும் பெய்யவில்லை. இதனால் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக சன்ன ரக நெல் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகம் மற்றும் கர்நாடகாவின் முக்கிய அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால், நடப்பு குறுவை சாகுபடியும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நெல் உற்பத்தி குறைவு மற்றும் இருப்பு பற்றாக்குறை காரணமாக கொள்முதல் விலை சில மாதங்களிலேயே கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்துள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நெல் வரத்து குறைந்ததோடு, லாரி வாடகைக் கட்டணமும் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் அரிசியின் சில்லறை விற்பனை விலை எகிறியுள்ளது.
சந்தையில் இதற்கு முன்பு ரூ.1,300-க்கு விற்பனை செய்யப்பட்ட 25 கிலோ அரிசி மூட்டை, தற்போது ரூ.1,600 வரை விலை அதிகரித்துள்ளது.
கர்நாடகா பொன்னி ஒரு கிலோ 50-55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 60-70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வரும் டிசம்பர் மாதம் வரை இதே நிலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்குப் முன்பு ஒரு கிலோ 40-45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள பொன்னி அரிசியின் விலையானது, தற்போது 60-70 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அரிசியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. நெல் உற்பத்தி குறைவு மற்றும் இருப்பு பற்றாக்குறை காரணமாக, வரும் காலங்களிலும் அரிசி விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் எச்சரித்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் அரிசி விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரிசி விலை உயர்விலேயே ஆகப்பெரும் அதிர்ச்சியாக, பிரியாணிக்கு பிரதானமாக பயன்படுத்தப்படும் சீரகச் சம்பா அரிசியின் விலை விண்ணை தொட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கிலோ ரூ.84 ஆக இருந்த சீரக சம்பா, தற்போது ஓராண்டில் மட்டும் கிலோவுக்கு ரூ.96 உயர்ந்து, ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் தட்டுப்பாட்டை பயன்படுத்தி சில சில்லறை வியாபாரிகள் தங்களுக்கு தகுந்தாற்போல் கூடுதல் விலை வைத்தும் விற்பனை செய்து வருகின்றனர்.
இது குறித்து அரிசி வணிகர்கள் கூறுகையில்,"அண்டை மாநிலங்களில் ஆலைகளின் தேவை போகவே தமிழகத்திற்கு நெல் கிடைக்கிறது. சன்ன ரக நெல் தட்டுப்பாடு நீடிப்பதால், அரிசி விலை கிலோவுக்கு மேலும் ரூ.20 வரை உயர வாய்ப்புள்ளது. இந்த விலை உயர்வு வரும் டிசம்பர் மாதம் வரை, அதாவது அடுத்த 6 மாதங்களுக்குத் தொடரக்கூடும்" என எச்சரித்துள்ளனர்.
அரிசியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒட்டுமொத்த குடும்ப பட்ஜெட்டையும் உலுக்கியுள்ளது. எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு அரிசி விலையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும், ஏழை எளிய மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் ரேஷன் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் மலிவு விலையில் தரமான அரிசி தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.