

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்கள் பலர், இரவும் பகலும் கணினி முன் அமர்ந்து வேலை செய்யும் சூழல் நிலவுகிறது. நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம் முடிந்த பிறகும் தொடரும் பணியின் சுமையால், தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையேயான சமநிலையை இவர்களால் பேண முடிவதில்லை.
இந்தச் சமநிலையின்மை காரணமாக உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்படுவதுடன், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடவும் வாய்ப்பில்லாமல் தவிக்கின்றனர். சில சமயங்களில் அதிகப்படியான பணி அழுத்தம் காரணமாக சிலர் தற்கொலை முடிவுகளையும் எடுப்பதைப் பார்க்கிறோம். இந்த மோசமான நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, எம்.பி. சுப்ரியா சுலேவால் முன்மொழியப்பட்டுள்ள 'அலுவலக நேரத்திற்குப் பிறகு துண்டிப்பதற்கான உரிமை' (Right to Disconnect) மசோதா அமைந்துள்ளது.
பணி நேரம் முடிந்த பிறகும் வரும் அலுவல் ரீதியான செல்போன் அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சலுக்கு பதில் அளிக்க ஊழியர்களை வற்புறுத்தக் கூடாது என்ற அம்சத்தை உள்ளடக்கிய பணியாளர் நலன் சார்ந்த RIGHT TO DISCONNECT (தொடர்புத்துண்டிக்கும் உரிமை மசோதா, 2025) எனும் முக்கியமான தனிநபர் மசோதாவை அண்மையில் மக்களவையில் முன்மொழிந்தார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி சுப்ரியா சுலே.(Supriya Sule)
Right to Disconnect மசோதாவின் சிறப்பு இதுதான்.. பணி நேரத்துக்கு பிறகோ அல்லது விடுமுறை நாட்களிலோ பணியாளர்கள் தங்களுக்கு வரும் அலுவல் தொடர்பான தொலைபேசி அழைப்புகள், மெசேஜ்கள் மற்றும் இ-மெயில்களுக்கு பதில் அளிக்க வேண்டியதில்லை. அப்படி வரும் செய்திகளை தவிர்த்தால் தங்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமோ என அஞ்ச வேண்டியதில்லை. எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையையும் நிர்வாகம் எடுக்க முடியாது என்பதையே Right to Disconnect மசோதா முன்மொழிகிறது. சட்டரீதியான இதன் மூலம் பணி அழுத்தம் இன்றி பலரும் தங்களது பணி மற்றும் வாழ்க்கையை சிறப்பானதாக அமைத்துக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கொரோனா தொற்று காரணத்தினால் பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து ஊழியர்கள் பணியாற்ற அனுமதித்தது. தொடர்ந்து ஹைபிரிட் முறையில் வீடு, அலுவலகம் என மாறி மாறி பணியாற்றும் நிலை ஏற்பட்டது. இன்னும் முழுமையாக இந்த நிலை மாறவில்லை. இதனால் நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை என்பதை கடந்து பணியாற்ற வேண்டி உள்ளதாக பணியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மசோதா நிறைவேறினால் இது போன்ற சங்கடங்களைத் தவிர்த்து பணியில் சுதந்திரம் கிடைக்கும் என கருதப்படுகிறது.
வேலை நேரத்துக்குப் பின் தொடர்பு கொள்வது கட்டாயமானதாக இருக்கும் பட்சத்தில் அதற்கான ஒப்புதல் மற்றும் அதற்கான கூடுதல் ஊதியமும் (overtime pay / extra compensation) வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையும் இந்த மசோதாவில் இருக்கிறது. இதை
மீறுபவர்கள் அதாவது பணி நேரமல்லாத நேரத்தில் தொடர்பு வைத்து பதில் சொல்ல கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படலாம் என்றும் இந்த மசோதா முன்மொழிகிறது.
அத்துடன் இந்த சட்டம் அனைத்துப் பணிகளுக்கும் பொருந்த வாய்ப்பில்லை — மருத்துவம், அவசர சேவை, 24/7 வேலைக்குட்பட்ட துறைகள் போன்றவற்றிற்கு விதிவிலக்குகள் இருக்கலாம் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும்.
இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால் மகிழ்ச்சி தான். ஆனால் மத்திய அரசு சமர்பிக்கும் மசோதாக்கள் சட்டமாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் தனிநபர் மசோதாக்கள் நிறைவேறும் வாய்ப்பு குறைவு என்றும் கருத்துகள் உள்ளன.
பணியாளர்களின் மனநலன் மற்றும் உடல்நலன் மேம்பாடு, இரவு அழைப்பின்றி புத்துணர்வுடன் செயல்படும் பணியாளர்களால் உற்பத்தித்திறன் உயர்வு, தெளிவான வேலை நேர எல்லைகள், மேலாளர்கள் தேவையற்ற “after-hours” பணிகளைத் தவிர்த்து வேலைபளுவை குறைப்பது, குடும்ப நேரம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் கிடைத்து உறவுகள் மேம்பட உதவுவது போன்ற பல நன்மைகளைத் தரும் மசோதா சட்டமானால் பணியாளர்களுக்கு மகிழ்ச்சி தான்..