கல்வி உரிமைச் சட்ட உதவித்தொகை குறைப்பு: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

கல்வி உரிமைச் சட்ட உதவித்தொகை குறைப்பு: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

கல்வி வயதை எட்டிய அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வியை அரசு சட்டப்பூர்வமாக வழங்க அடிப்படை உரிமை உத்தரவாதப்படுத்துகிறது. இலவச கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் 2009, அரசியலமைப்பு உறுப்பு 21-Aன் கீழ் சட்டமாக இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி அத்தியாவசிய விதிமுறைகள், தரநிலைகள் அடிப்படையில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு முறையான பள்ளியில் நிறைவான, சமமான, தரமான முழுநேரத் தொடக்கக் கல்விக்கான உரிமை வழங்கப்படுகிறது. இதன்படி, தனியார் பள்ளிகளில் படிக்கும் நலிவுற்ற குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தி வருகிறது. இந்தக் கல்விக் கட்டணம் தற்போது குறைக்கப்பட்டிருப்பதாகக் கூறி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசுக்குக் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் வகுக்கப்பட்டு 12.11.2011 முதல் தமிழகத்தில் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சேர்ந்து பயில வழி வகுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்து பள்ளிகளுக்கு வழங்கும்.

கடந்த இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில், மேற்படி சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வந்த கட்டண விகிதம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, 2020-2021ம் ஆண்டில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு 12,458 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 6,000 ரூபாயாக குறைக்கப்பட்டுவிட்டது. இதேபோன்று ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கட்டணங்களும் 2021-2022ம் ஆண்டு குறைக்கப்பட்டன. 2022-2023ம் ஆண்டுக்கான கட்டணம் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை வெகு சிறிதளவு உயர்த்தப்பட்டாலும், ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கட்டணம் 2020-2021ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வெகு குறைவாகவே உள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, சொத்து வரி, மின் கட்டண வரி, விலைவாசி உயர்வு போன்றவற்றால் வெகுவாக தனியார் பள்ளிகள் பாதிக்கப்பட்டு, செலவினம் அதிகரித்துள்ள சூழ்நிலையில், கரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகளை இயக்குவதற்கே தனியார் பள்ளிகள் கஷ்டப்படுகின்ற நிலையில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை திமுக அரசு குறைப்பது நியாயமற்ற செயல். இது தவிர, இந்தத் தொகையை விடுவிப்பதிலும் தாமதம் ஏற்படுவதாக பள்ளிகள் தெரிவிக்கின்றன. சென்ற ஆண்டிற்கான கல்வி உதவித் தொகையை பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்னமும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. விலைவாசிக்கு ஏற்ப, ஆண்டுக்காண்டு உதவித் தொகையை உயர்த்துவதுதான் சரியான அளவுகோலாக இருக்குமே தவிர, குறைப்பது அல்ல.

மேலும், உதவித் தொகையை அரசு குறைவாக வழங்குவதும், காலந்தாழ்த்தி வழங்குவதும் பள்ளிகளை இயக்குவதில் பெரிய இடர்பாடுகளை ஏற்படுத்துவதோடு, மீதமுள்ள பணத்தை ஏழை, எளிய குழந்தைகளின் பெற்றோர்களிடமிருந்து வசூலிக்கும் நிலைக்கு பள்ளி நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. திமுக அரசு உதவித் தொகையை குறைத்ததன் காரணமாக, பெற்றோர்களிடமிருந்து மீதிப் பணத்தை வசூலிக்க தனியார் பள்ளிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

திமுக அரசின் இந்த நடவடிக்கை ஏழை, எளிய பெற்றோர்கள் மற்றும் தனியார் பள்ளிகளை பெருத்த சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. திமுக அரசின் இந்த நடவடிக்கை, கல்வியில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை என்பதை படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை குறைத்து வெளியிட்ட ஆணை திரும்பப் பெறப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு தனியார் பள்ளிகள் மற்றும் ஏழை பெற்றோர்களிடையே நிலவுகிறது.

ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் உதவித் தொகையை குறைத்து வெளியிட்ட ஆணையை உடனடியாக திரும்பப் பெற தேவையான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்று முதல்வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com