வெப் சீரிஸ் பார்த்து கொலை செய்த கொள்ளையர்கள்.

வெப் சீரிஸ் பார்த்து கொலை செய்த கொள்ளையர்கள்.
Published on

டெல்லியில் தனியாக வசித்த தாய் மகளை வெப் சீரிஸ் பார்த்து கொலை செய்த சினிமா இசையமைப்பாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தலைநகர் டெல்லியில் கிழக்கு பகுதியில் உள்ள கிருஷ்ணா நகரில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. அதில் E பிளாக்கில் முதல் மாடியில் வசித்தவர்கள் தாய் ராஜ் ராணி மற்றும் அவரது மகள் ஜின்னி கிரார். அவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து போலீஸ் குழுவினர் அங்கு விரைந்து சென்றபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்தது. எனவே கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, தாய் மகள் இருவரும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். வீட்டில் உள்ள பொருட்கள் சிதறிக் கிடந்தது. எனவே ஏதோ விபரீதம் நடந்ததாகக் கருதிய போலீசார் முதலில் இறந்தவர்கள் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் விசாரணையில் இறங்கினர். 

அப்போது ராஜ் ராணி அவரது மகள் ஜின்னி ஆகியோரை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த விலை உயர்ந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். மேலும் அவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிப்பதில் இறங்கினர். அதற்காக குடியிருப்பு பகுதியிலுள்ள 200க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். கொலையான வீட்டில் வீடியோ ஸ்கிரீன் என்ற அமைப்பும் பொருத்தப் பட்டிருந்தது. அதன் மூலம் வீட்டுக்கு வெளியே நிற்பவர்களை பார்த்த பின்னரே உள்ளே அனுமதிக்க முடியும். அதன்படி கொலையாளிகள் இறந்தவர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்களாக இருக்கலாம் என போலீசார் கருதினர். 

வீட்டில் கிடைத்த தடயங்கள், அக்கம் பக்கத்தினர் தெரிவித்த தகவல் அடிப்படையில், கொலையாளிகள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 28 வயது கிஷன் மற்றும் அவரது உறவினர் 25 வயது அங்கீத் குமார் சிங் என்பதை போலீசார் அடையாளம் கண்டு, அவர்களை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இதை அறிந்த கொலையாளிகள், தனித்தனியாகப் பிரிந்து பீகாருக்கும், அஸ்ஸாமுக்கும் தப்ப முயன்றனர். அப்போது போலீசார் அங்கீத் குமாரை  முதலில் கைது செய்தனர். தனது கூட்டாளி கைது செய்யப்பட்டதை அறிந்த கிஷன் இனி தப்ப முடியாது என அறிந்து, டெல்லி நீதிமன்றத்தில் சரணடைய வந்தபோது அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர் டெல்லி காவல்துறையினர். 

கைதானவர்களில், கிஷன் தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். அவரது உறவினரான அங்கித் குமார் சிங் சினிமா இசையமைப்பாளராக இருக்கிறார். இவர்கள் குறுகிய காலத்தில் பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில், இந்த இரட்டை கொலை செய்ததாகக் கூறியுள்ளனர். அதற்காக வெப் சீரிஸ் பார்த்து கொலை திட்டத்தை வகுத்ததாகக் கூறியுள்ளனர். தங்கள் சதித் திட்டத்திற்கு 'மிஷன் மலமால்' என வாட்ஸ் அப்பில் பெயர் வைத்து இந்தக் கொலைகளை அரங்கேற்றியதாகவும், அதற்கு முன்னதாக வழக்கறிஞர்களிடம் சட்டரீதியான விவரங்களைக் கூறியதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதில் கிஷன் என்பவர் ஆன்லைன் டியூஷன் சேவை வழங்கும் இணையதளத்தில் தன்னை பதிவு செய்து கொண்டுள்ளார். அதை அறிந்த ராஜ் ராணி தன்னுடைய மாற்றுத் திறனாளி மகளான ஜென்னி கிராருக்கு கணினி பாட ஆசிரியராக கிஷனை நியமித்துள்ளார். கிஷன் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ராஜ் ராணியின் வீட்டுக்கு செல்லத் தொடங்கியுள்ளார். அப்போது அவர்களின் நம்பிக்கையை மெதுவாகப் பெற்றார். ராஜ் ராணி வேறு வீட்டுக்கு குடிபெயரத் திட்டமிட்டபோது, அதற்கு பணப் பரிவர்த்தனை செய்ய ஆன்லைன் பணப்பரிவர்த்தனை விவரங்களை கிஷனுடன் பகிர்ந்துள்ளார். அப்போது அவர்களின் வங்கிக் கணக்கில் 50 லட்சத்திற்கும் மேல் இருப்பதை அறிந்த கிஷன், அதை அபகரிக்கத் திட்டமிட்டுள்ளார். அதற்காக அங்கீத் குமாருடன் சேர்ந்து தாய் மகளை கொலை செய்து அந்தப் பணத்தை கொள்ளையடித்துவிடலாம் என முடிவு செய்து, சரியான நேரத்தில் அவரின் திட்டத்தையும் நிறைவேற்றியுள்ளார். 

அடுக்குமாடி வீட்டில் தனியாக வசித்த தாய் மகளைக் கொன்று, நகைப் பணத்தை கொள்ளையடித்த நண்பர்கள், அதற்காக 'மிஷன் மலமால்' என்ற பெயரில் சதித்திட்டம் தீட்டி, வெப் சீரிஸ் பார்த்து கொலைகளை அரங்கேற்றிய சம்பவம், டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com