தூத்துக்குடியில் குலசேகரப்பட்டினத்தில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஏவுதளத்திலிருந்து இன்று காலை 9.30 முதல் நாளை மதியம் 2 மணிக்குள் ரோகினி ராக்கெட் ஏவப்படவுள்ளது. இதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர், “தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ( இஸ்ரோ) ஏவுதள வளாகத்திலிருந்து இன்று காலை 9.30 முதல் நாளை பிற்பகல் 2 மணிக்குள் ஆர்.ஹெச் 200 – ரோகினி ஏவுகணை ஏவ திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீ ஹரிகோட்டாவின் இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அந்த குறிப்பிட்ட நேரத்தில் மணப்பாடு கலங்கரை விளக்கத்திற்கும் பெரிய தாழை தூண்டில் பாலத்திற்கும் இடையிலான கடற்கரை பகுதியான 10 கடல் மைல் அதாவது 18 கிமீ அளவு தூரம் வரை, ஆபத்தான பகுதியாக இஸ்ரோ அறிவித்துள்ளது. எனவே இன்று காலை 9.30 மணி முதல் நாளை மதியம் 2 மணி வரை மீனவர்கள் கடல் பகுதிக்குள் நுழைய வேண்டாம்” என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்த ரோகினி ராக்கெட் இந்திய பெருங்கடலின் குறிப்பிட்ட தூரம் வரை உள்ள காற்றின் வேகத்தை அறிந்துக்கொள்வதற்காகத்தான் ஏவப்பட உள்ளது என்று தெரியவந்துள்ளது.
இதற்கிடையே இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த நரேந்திர மோதி, குலசேகரப்பட்டினத்தில் புதிதாக அமைய உள்ள ராக்கெட் ஏவுதள பணிக்கு அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரதமர் வருகை, ரோகினி ராக்கெட் ஏவுதல் போன்றவற்றால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நாளை 2 மணி வரை இந்த பலத்த பாதுகாப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.