நடுவானில் சிக்கிய ரோப் கார்: 250 பயணிகள் பத்திரமாக மீட்பு!

நடுவானில் சிக்கிய ரோப் கார்: 250 பயணிகள் பத்திரமாக மீட்பு!
Published on

உலகின் மிக உயரமான ரோப் கார் வழித்தடங்களில் ஒன்றான காஷ்மீர் குல்மார்க் பகுதியில் உள்ள ரோப் கார் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.

நாடு முழுவதும் கடும் கோடை வெயில் மற்றும் கல்வி நிலையங்கள் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிர்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்லத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக உலகின் அழகான நகரங்களில் ஒன்றான காஷ்மீர் பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர். இங்கு குல்மார்க் பகுதியில் உள்ள ரோப் கார் வசதி உலகின் மிக உயரமான சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இந்நிலையில், 250 பயணிகள் ரோப் காரில் ஏறிக்கொண்டு காஷ்மீரின் அழகை ரசித்துக்கொண்டிருந்த வேளையில், நடுவானில் ரோப் கார் திடீரென நிறுத்தப்பட்டது. தொடக்கத்தில் உயரத்தில் இருந்து காஷ்மீரை சுற்றி பார்க்கத்தான் ரோப் கார் நிறுத்தப்பட்டது என ரோப் காரில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், 20 நிமிடங்களுக்கு மேலாக ரோப் கார் நிறுத்தப்பட்டதால் ரோப் காரில் இருந்த 250 பயணிகளும் அச்சத்தால் உறைந்தனர். அதன்பிறகுதான் ரோப் கார் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது என தெரியவந்தது. கடும் குளிர் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவும் குல்மார்க் பகுதியில் நடுவானில் அந்தரத்தில் ரோப் காரில் தொங்கிகொண்டிருந்த பயணிகளுக்கு அடுத்து என்ன செய்து என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர்.

ஆனால், அதற்குள் இன்ஸ்பெக்டர் இர்ஷாத் அகமது தலைமையிலான போலீஸ் மீட்புக் குழுவினர், குல்மார்க் கோண்டோலா கார் கார்ப்பரேஷன் ஊழியர்களின் உதவியுடன், இரவு முழுவதும் கடும் முயற்சிகளுக்குப் பிறகு, சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகளை மீட்டு, குல்மார்க் தரை தளத்துக்கு பாதுகாப்பாக அழைத்து வந்தனர். மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கிக்கொண்ட 250 சுற்றுலா பயணிகளை காவல் துறையினர் விரைவாக செயல்பட்டு மீட்டுள்ளது அவர்களுக்கு பாராட்டுக்களை பெற்றுத்தந்துள்ளது. பத்திரமாக மீட்கப்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு குல்மார்க் ரோப் கார் கனவிலும் மறக்கமுடியாத நினைவுகளை கொடுத்துச் சென்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com