நகர்வலம் : இன்னும் செயல்பாட்டுக்கு வராத கிண்டி கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை!

நகர்வலம் : இன்னும் செயல்பாட்டுக்கு வராத கிண்டி கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை!
Published on

மேற்கு சைதாப்பேட்டையிலிருந்து கிண்டியை நோக்கிச்செல்லும் கூவம் மேம்பாலத்தில் ஏறி இறங்கியதும் கண்ணில் தென்படும் புதிய கட்டிடம், பிரம்மாண்டமான மாளிகை போல் ஜொலிக்கிறது. கடந்த மாதம் இதே நாளில் திறந்து வைக்கப்பட்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை, ஒரே ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட பெருமைக்குரியது.

230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பன்னோக்கு மருத்துவமனை இன்னும் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை என்பதுதான் சோகம். தினமும் காலை 9 மணி முதல் 12 மணி வரை செயல்பட்டு வரும் மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை மட்டுமே வழங்கப்படுகிறது. மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதில்லை.

ஆக்சிஜன் சிலிண்டர்கள், படுக்கை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் தயராக இல்லை என்பதால் மருத்துவமனை இன்னும் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை என்கிறார்கள். ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனை, குடியரசுத் தலைவர் வருகைக்காக ஒரு மாதம் காத்திருக்க வேண்டியிருந்தது என்று சொல்லப்பட்டது. ஆனால், மருத்துவமனையில் இன்னும் கட்டிடப்பணிகள் நிறைவடையவில்லை.

ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகின. 51 ஆயிரத்து 429 சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.230 கோடி மதிப்பீட்டில், 7 மாடியுடன் 1000 படுக்கை வசதிகளை கொண்ட மருத்துவ மனை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் ஓராண்டாக தொடர்ந்து நடைபெற்று வந்து சென்ற மாதம் நிறைவடைந்தது. ஆனால், தற்போது முழுமையாக பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.

தமிழ்நாட்டில் முதல் முறையாக கொரானா தொற்று, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட்டில்தான் பரிசோதனை செய்யப்பட்டது. முதல் அலை மட்டுமல்ல மூன்றாவது அலை ஓயும்வரை கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் கொரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதே வளாகத்தில் பன்னோக்கு மருத்துவமனை அமையும் பட்சத்தில், தென் சென்னைவாசிகளுக்கு பெரிதும் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசுத் தலைவரின் வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பங்கேற்க வசதியாக திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டிருந்தது. குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து எந்தவித உறுதியான செய்தியும் வெளியாகவில்லை என்பதால் முதல்வரே திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டது. திறப்பு விழவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், வாக்களித்தபடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு இதுவரை கட்டி முடிக்கவில்லை. ஆனால், குறுகிய காலத்தில் மருத்துவமனையை நாங்கள் கட்டி முடித்திருக்கிறோம் என்று பேசியிருந்தார்.

கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை எப்போது முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என்று தெரியவில்லை. ஒரே ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடம் என்பதை விட, ஒரே மாதத்தில் செயல்பட துவங்கிய மருத்துவமனை என்பதுதான் முக்கியம் என்பதை அரசு உணருமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com