லண்டனில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் மூச்சு இரைக்க கடைசியாக வந்த நபரை பார்வையாளர்கள் பொறுமையுடன் காத்திருந்து மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பி உற்சாகமாக வரவேற்ற விடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
மொத்தம் 42 கி.மீ. அதாவது, 26.2 மைல் தொலைவுள்ள மாரத்தான் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் டாம் டர்னின் என்பவர் கடைசியாக வந்தார். அவர் அந்த தூரத்தை கடந்து வர 8 மணி நேரம், 10 நிமிடங்கள் மற்றும் 58 விநாடிகள் எடுத்துக் கொண்டார்.
டுவிட்டரில் வெளியான அந்த விடியோவில் 2023 லண்டன் மாரத்தானில் இறுதியாக அதாவது கடைசியாக வந்த நபரின் விடியோ வெளியாகி உள்ளது. “மிகவும் சோர்ந்த நிலையிலும் அந்த நபர் விடா முயற்சியுடனும் மன உறுதியுடனும் கடந்துள்ளதை வரவேற்கிறோம்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டாம் டர்னின் இறுதிக் கோட்டை அடையும் போது மிகவும் சோர்வாக இருந்தார். அவரை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். ஒருவர் வெல்டன் டாம் டர்னின். விடா முயற்சியுடன் இறுதிக்கோட்டை எட்டிய உங்களை
பாராட்டுகிறோம் என்று மகிழ்ச்சியுடன் கூறினார். அவர் சோர்வாக இருந்தாலும் புகைப்படக்காரர்களுக்கு உற்சாகத்துடன் போஸ் கொடுத்தார்.
சோர்வான நிலையில் கடைசியாக வந்தாலும் மாரத்தானை முழுமையாக பூர்த்தி செய்த்தற்காக அவரை இணையதள பார்வையாளர்கள் பலரும் பாராட்டினர். அவர் கடைசியாக வந்தவர் இல்லை. மாரத்தானை முழுமையாக முடிக்காதவர்களை அவர் வென்றுவிட்டார். “ஹாட்ஸ் ஆப் டாம்” என்று ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
உண்மையிலேயே ஹீரோ அவர்தான். அவரது பலத்தையும் மன உறுதியையும் நான் பாராட்டுகிறேன். அவர் கடைசியாக வந்தாலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் கடைசிவரை இருந்து அவரை உற்சாகத்துடன் வரவேற்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. டாம் உண்மையிலேயே மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்துள்ளார் என்று மற்றொருவர் கருத்து பதிவு செய்துள்ளார். டாமின் துணிச்சலும் மன உறுதியும் என்னை கண்கலங்க செய்துவிட்டது என்று மாரத்தானில் பங்கேற்கும் ஒருவர் குறிப்பிட்டார்.