

இரு சக்கர வாகனங்களின் ராஜாவாகிய ராயல் என்ஃபீல்ட் உலகப் புகழ்பெற்ற கிளாசிக் மற்றும் ரெட்ரோ மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் ஆகும். மேலும், இது 250cc முதல் 750cc வரையிலான பிரிவில் இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளராக திகழ்கிறது. பிராண்ட் ஃபைனான்ஸ் ஆட்டோமோட்டிவ் இண்டஸ்ட்ரி 2026 அறிக்கையின்படி இந்நிறுவனம்'உலகின் வலிமையான ஆட்டோமொபைல் பிராண்டுகள்' பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராயல் என்ஃபீல்டின் 350cc முதல் 650cc வரையிலான மோட்டார் சைக்கிள்களின் உற்பத்தியை நிர்வகிக்கும் வகையில் இந்நிறுவனத்திற்கு தற்போது தமிழ்நாட்டில் உள்ள ஒரகடம், வல்லம் வடகால் மற்றும் செய்யாறு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே உற்பத்தி திறனை அதிகபட்சமாகப் பயன்படுத்தி வருவதாலும், எதிர்கால வாகன தேவைகள் மற்றும் ஏற்றுமதியை சமாளிக்கவும் இந்நிறுவனம் தனது உற்பத்தியை தமிழ்நாட்டிற்கு வெளியே விரிவுபடுத்துகிறது.
ஆம்.. ராயல் என்ஃபீல்ட் தனது எதிர்காலத் திட்டங்களுக்காக ஒரு புதிய ஆலையை அமைக்க ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டம் தடா(சத்யவேடு) பகுதியில் சுமார் ரூ. 2,500 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. குறிப்பாக 1955-க்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு வெளியே அமையும் நிறுவனத்தின் முதல் பிரம்மாண்ட ஆலை இதுவாகும்.
தமிழ்நாட்டிற்கு வெளியே அந்நிறுவனத்தின் முதல் பெரிய விரிவாக்கமாக அமையவுள்ள இந்த ஆலை, ஆண்டு உற்பத்தித் திறனை 9 லட்சம் பைக்குகள் வரை அதிகரிக்கும் என்றும் மேலும் ஒரு பிரத்யேக விற்பனையாளர் பூங்காவையும் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்ற தகவல் அப்பகுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விரிவாக்க திட்டம் குறித்து ஐஷர் மோட்டார்ஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநரும், ராயல் என்ஃபீல்டின் தலைமை செயல் அதிகாரியுமான பி.கோவிந்தராஜன், “எங்கள் சமூகத்துடன் இணைந்திருந்து, மிகச் சிறந்த தயாரிப்புகளையும் அனுபவங்களையும் வழங்குவதே ராயல் என்ஃபீல்டின் தத்துவமாக எப்போதுமே இருந்து வருகிறது. நாங்கள் தற்போது தமிழ்நாட்டில் நான்கு உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலைகளை இயக்கி வருகிறோம். இதன் மொத்த ஆண்டு உற்பத்தித் திறன் 20 லட்சம் யூனிட்கள் ஆகும். ஆந்திரப் பிரதேசத்தில் செய்யப்படும் இந்த முதலீடு, அந்தத் திறனை மேலும் அதிகரித்து, எங்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும்” என்று செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.
இதுபற்றி தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்த ஆலையில் ஆண்டுக்கு 9,000 பைக்குகள் உற்பத்தி செய்யப்படும் என்றும் இதன் மூலம் 15,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.