தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்தார் லூர்து பிரான்சிஸ். புதுக்கோட்டையைச் சேர்ந்த இவர், தனது அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், ஆற்றில் மணல் அள்ளியது தொடர்பாக புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த ராமசுப்பிரமணியம் மற்றும் மாரி ஆகிய இருவர் இந்தப் படுகொலையை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து ராமசுப்பிரமணியத்தை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மருத்துவமனைக்கு சென்று விசாரணை செய்தார்.
இதையடுத்து படுகொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், விஏஓ லூர்து பிரான்சிஸ்ஸின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும், கருணை அடிப்படையில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.