கேரளா படகு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10லட்சம் நிவாரண நிதியை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரத்தில் 40 பேருடன் சென்ற சுற்றுலா படகு ஒன்று கவிழ்ந்ததில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 4 குழந்தைகள் அடங்குவர். 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா படகில் அதிகம் பேர் பயணம் செய்தது படகு கவிழ்ந்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது. இரண்டு அடுக்கு கொண்ட அந்தப் படகின் கீழ் பகுதியில் இருந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், இந்திய கடலோர காவற்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மூத்த அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில், இதுவரை சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், கடலோர காவற்படையினர் ஈடுபட்டுள்ளனர். படகில் எத்தனை பேர் இருந்தனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதனால் தேடுதல் பணி தொடர்கிறது என்றார்.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள தனூர் ஒட்டுபிரம் கடற்கரையில் உல்லாச படகு சவாரி நடைபெறுவது வழக்கம். கோடை விடுமுறையை முன்னிட்டு இந்தியா முழுக்க பல சுற்றுலாத் தளங்களில் பொது மக்கள் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை படகு சவாரியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. படகில் மொத்தம் 50 பேர் பயணம் செய்ததாக சொல்லப்படுகிறது. அவர்களில் 30க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கியுள்ளனர்.
நீரில் மூழ்கியவரை தேடும் பணி மும்முரமாக நடைபெற்றது. மீட்கப்பட்டவர்களில் பலர் ஆபத்தான நிலையில் கொட்டக்கலில் உள்ள MIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் பரப்பனங்காடி மற்றும் தனுர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்டமாக தகவல் வெளியாகி உள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தனுர் பகுதியில் ஒருவரது இல்ல விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் கும்பலாக படகு சவாரி செய்த போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தனூர் படகு விபத்தில் உரிமையாளர் மீது பிணையில் வர முடியாத பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மலப்புரம் தானூரைச் சேர்ந்த நாசர் மீது கொலை உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் நாசர் தலைமறைவாகியுள்ளார்.
படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.கேரளா படகு விபத்து சம்பவத்தின் எதிரொலியாக இன்று கேரளா அரசின் அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று காலை விபத்து நடைபெற்ற இடத்திற்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.