தொடரும் தவறுகள்.. மீண்டும் வங்கி கணக்கில் ரூ.753 கோடி.. சென்னையில் அதிர்ச்சி!

மருந்தக ஊழியர்
மருந்தக ஊழியர்

சென்னை தேனாம்பேட்டையில் மருந்துக் கடை ஊழியர் ஒருவரின் வங்கிக் கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட் ஆனது அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது. பணம் வந்த சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாக தெரிகிறது.

சென்னை தேனாம்பேட்டையில் மருந்து கடையில் பணியாற்றும் முகமது இத்ரிஸ் என்ற இளைஞர் கோட்டக் மஹிந்திரா வங்கியில் வங்கிக் கணக்கை நிர்வகித்து வருகிறார். இவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து தனது நண்பருக்கு 2 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். உடனே, வங்கியில் இருந்து வந்த குறுஞ்செய்தியில் அவரது வங்கிக் கணக்கில் பேலன்ஸ் ரூ.753 கோடி உள்ளதாக காட்டியுள்ளது.

இதையடுத்து, அதிர்ச்சியடைந்த இத்ரிஸ், சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு போன் மூலம் அழைத்து விவரத்தை கூறியுள்ளார். சில நிமிடங்களிலேயே அவரின் வங்கி கணக்கை வங்கி நிர்வாகம் முடக்கியுள்ளது. மேலும் இதுகுறித்து அவர் விளக்கம் கேட்டும் அதிகாரிகள் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வங்கி கணக்கை முடக்கியது தொடர்பாக அவர் காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை கோடம்பாக்கத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜ்குமார் என்பவரின் வங்கி கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆகியிருந்தது. அதில் சில ஆயிரங்களை அவர் தனது நண்பருக்கு அனுப்பிய நிலையில், பிறகு வங்கி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று தஞ்சாவூரில் நேற்று கணேசன் என்பவரது கோட்டக் மஹிந்திரா வங்கி கணக்கில் ரூ.756 கோடி வரவு வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று சென்னையை சேர்ந்த ஒருவரின் வங்கியில் ரூ.753 கோடி வரவு வைக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நடக்கும் சம்பவங்களுக்கு யார் காரணம், இதை தடுப்பதற்கு என்ன வழி என வங்கிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com