உக்ரைன் துறைமுகத்தின் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்!

உக்ரைன் துறைமுகத்தின் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்!

ஷ்யா- உக்ரைன் இடையிலான போரில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைனின் துறைமுக நகரான ஒடேசா மீது ரஷ்யா இன்று காலை ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

ஐநா சபை மூலம் உக்ரைனுக்கான உணவுதானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா நேற்று விலகியது. அதையடுத்து நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன் தினம் ரஷ்யாவையும் அது கைப்பற்றிய முன்னாள் உக்ரைன் பிரதேசமான கிரீமியாவையும் இணைக்கும் கடல் பாலத்தில் வெடித் தாக்குதல் நடத்தப்பட்டது. ரஷ்யாவின் தாக்குதலில் ஈடுபட்டுள்ள படையினருக்கு முக்கிய வழங்கல் வழியாக இருந்த கிரீமியா பாலத்தை டிரோன்கள் மூலம் தாக்கியதால், ஆத்திரம் கொண்ட ரஷ்யா, பதில் தாக்குதலில் இறங்கியுள்லது.

கருங்கடல் பகுதியில் கிரீமியாவில் இருந்துகொண்டு உக்ரைனுக்கும் மேற்கு நாடுகளின் படைகளுக்கும் ரஷ்யா சவாலாக, அந்தப் பாலத்தை ரஷ்யா முக்கியமாகப் பயன்படுத்தி வருகிறது. அதன் மீதான தாக்குதலை தீவிரமாக எடுத்துள்ள ரஷ்யா, உக்ரைனின் துறைமுகங்களைக் குறிவைத்துள்ளது.

உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒடேசா, மிகோலைவ் பகுதிகளில் ரஷ்யா 36 டிரோன்கள் மூலமும் ஆறு காலிபர் ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தியது என்றும், 31 டிரோன்களை தாங்கள் சுட்டு வீழ்த்திவிட்டதாகவும் உக்ரைன் அதிபர் மாளிகை அதிகாரி ஆந்திரி எர்மாக் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளுக்கு அதிக அளவில் கோதுமையை ஏற்றுமதி செய்யும் நாடாக உக்ரைன் இருந்துவரும் நிலையில், அந்த ஏற்றுமதிக்கு எந்தப் பிரச்னையும் செய்யக்கூடாது என ஐநா சபை மூலம் ரஷ்யாவுடன் உடன்பாடு செய்துகொள்ளப்பட்டது. கிரீமியப் பாலத் தாக்குதலால் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாக ரஷ்யா தெரிவித்து விட்டது.

இந்நிலையில் ரஷ்யாவின் இன்றைய தாக்குதல் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றே கூறப்படுகிறது. உயிர்ச் சேதம் இல்லை என்றாலும், ஒடேசா துறைமுகத்தில் கட்டுமானங்களை சேதாரப்படுத்தி உள்ளதாகவும் பல வீடுகள் தாக்குதலில் சேதமடைந்துள்ளன என்றும் உக்ரைனின் தென்பகுதி படைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்னொரு துறைமுகமான  மிகோலைவில் ரஷ்யாவின் தாக்குதலால் பெரும் தீ பிடித்தது என்றும் ஊடக முகமைகள் தெரிவிக்கின்றன.அண்மையில் முடிந்த நேட்டோ மாநாட்டை அடுத்து, உக்ரைனுக்கு மேற்கு நாடுகள் அளித்துள்ள ஆயுதங்கள் இன்னும் போரில் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என உறுதியாகவில்லை. ஆனால், உக்ரைன் தரப்பில் தாங்கள் மெதுமெதுவாக முன்னேறியபடி இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளன. 

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com