கச்சா எண்ணெய் விலை உயர்வு: சாமானியர்களை பாதிக்க வாய்ப்பு!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: சாமானியர்களை பாதிக்க வாய்ப்பு!
Editor 1
Published on

ஷ்யாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் தள்ளுபடியை ரஷ்ய நிறுவனங்கள் குறைத்ததால், இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோலியப் பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த ஆண்டு போர் தொடங்கியப் பிறகு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தன. இதனால் ரஷ்யாவின் வர்த்தகம் மிகப் பெரும் அளவில் சரிவை சந்திக்கத் தொடங்கியது. இந்த நிலையில் ரஷ்யாவின் முக்கிய ஏற்றுமதி தொழில்களில் ஒன்றான கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் வீழ்ச்சியை நோக்கிச் சென்றது.

இதைத் தொடர்ந்து ரஷ்யாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மிகப்பெரிய நாடுகளான இந்தியா மற்றும் சீனாவை நோக்கி தங்கள் முழு கவனத்தையும் செலுத்தின, மேலும் அந்த நாடுகளுடன் புதிய ஒப்பந்தத்தையும் மேற்கொண்டன.

இதன்படி இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெயில் தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனால் போருக்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்ட தொகையை விட பீப்பாய் ஒன்றுக்கு 30 டாலர்கள் வரை குறைத்து ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்தது. இதனால் கடந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்யாவிடம் இருந்து 2 சதவீத கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த இந்தியா, தற்போது 44 சதவீத கொள்முதல் என்று உயர்த்தி உள்ளது.

இந்த நிலையில் ரஷ்யாவிடம் வணிகம் செய்யும் நாடுகளின் எண்ணிக்கை மிகப்பெரும் அளவில் குறைந்ததாலும், இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கும் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதாலும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகின்றன. இதனால் தற்போது பீப்பாய் ஒன்றுக்கு 4 டாலர் வரை மட்டும் தள்ளுபடி வழங்க முடிவு செய்து பட்டிருக்கிறது. மேலும் ஏற்றுமதிக்கான கட்டணத்தையும் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பெட்ரோலிய பொருட்களின் விலை இந்தியாவில் உயர்ந்தால் தற்போது அனைத்து பொருட்கள் மீதும் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மேலும் உச்சத்தை தொடும், இதனால் மக்கள் மேலும் சிரமத்திற்கு உள்ளவர்கள்.

பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் போன்ற பொதுத்துறை நிறுவனங்களும் ரிலையன்ஸ், நயாரா போன்ற தனியார் பெட்ரோலிய நிறுவனங்களும் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுடன் தள்ளுபடியை மீண்டும் வழங்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com