ரஷ்யாவில் இருந்து சென்னை வந்த கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல்..!

Aqua titan ship
Aqua titan ship image source: ndtv
Published on

ரஷ்யா துறைமுகத்திலிருந்து ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் சென்னை துறைமுகம் வந்தடைந்தது. மற்றொரு கப்பல் வருகின்ற 24-ஆம் தேதி வந்தடையும் என சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ரஷ்யாவில் இருந்து சீனாவுக்கு செல்லவிருந்த சுமார் ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிய 'அக்வா டைட்டன்'(Aqua Titan) கப்பல், மத்திய கிழக்கு பதற்றத்தால் பாதை மாற்றப்பட்டு இன்று இந்தியாவிற்கு வந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் போர் சூழல் மற்றும் விநியோகத் தடைகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கும் எண்ணெய் அளவு இந்த மார்ச் மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. 

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நீடித்து வருகிறது. ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் அந்த வழியாக பெரும்பாலான நாடுகளுக்கு கப்பலில் கச்சா எண்ணெய் எடுத்துச் செல்வது பாதிக்கப்பட்டுள்ளது. இதர நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு வருவதில் மத்திய அரசு தனிக்கவனம் செலுத்தி வரும் நிலையில், ரஷ்யாவின் நகோட்கா துறைமுகத்தில் இருந்து ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் சென்னை துறைமுகம் வந்தடைந்தது. 

அடுத்த கப்பல் வருகின்ற 24-ஆம் தேதி சென்னை வரும் என்றும், இந்த மாத இறுதிக்குள் மேலும் இரண்டு கப்பல்கள் அடுத்தடுத்து வரும் எனவும், கச்சா எண்ணெய் விநியோகத்தில் எந்தத் தட்டுப்பாடும் ஏற்படவில்லை என்றும் சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னை துறைமுகத்திற்கு வழக்கமாக மாதம்தோறும் நான்கு கப்பல்களில் 10 லட்சம் டன் கச்சா எண்ணெய் எடுத்து வரப்படும். தற்போது சென்னை துறைமுகத்தில் 6.50 லட்சம் டன் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதாகவும் சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com