உக்ரைன் மீது உக்கிரமான தாக்குதலுக்குத் தயாராகும் ரஷ்யா........?

உக்ரைன் மீது உக்கிரமான தாக்குதலுக்குத் தயாராகும் ரஷ்யா........?

ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும், கடந்த 2014 ஆண்டு முதலே பகை இருந்து வருகிறது. ரஷியக்கூட்டமைப்பிலிருந்து, மக்கள் வாக்கெடுப்பின் மூலம், தனிநாடாக பிரிந்து வந்தது.

அப்போது முதல் 'நேட்டோ' நாடுகளின் அமைப்பில், தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும், என அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்தது. இது ரஷ்யாவிற்கு மிகவும் எரிச்சலை உண்டு பண்ணி, இருநாடுகளுக்கிடையே மேலும் விரோதத்தை வளர்த்தது.

இதனால் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்திருந்தார். என்றாலும் உக்ரைன் தனது முடிவிலிருந்து பின்வாங்காமல் இருந்தது. நேட்டோ நாடுகளின் சேர்க்கையால், அமெரிக்கா ரஷ்யாவிற்கு எதிராக எளிதாக செயல்படக்கூடும், என்று ரஷ்யா அஞ்சியது.

எனவே உக்ரைனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரும்பினார். இதனால் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்றளவில், போர் மேகங்கள் சூழ்ந்தன‌. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தபோது, பல காலமாக மறுத்து வந்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ந்தேதி, ரஷ்யா உக்ரைன் மீது குண்டு மழையைப் பொழிந்தது. ஏவுகணைகள் பறந்து வந்து தாக்கியதில், உக்ரைனில் பல நகரங்கள் சின்னாபின்னமாயின. முன்னதாக எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்றுணர்ந்த உக்ரைனும் எதிர்த் தாக்குதலை நிகழ்த்தியது.

கடந்த ஓராண்டு காலமாக போர் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை உக்ரைனுக்கு, சுமார் 108.8 பில்லியன் டாலர் மதிப்பிற்கு ஆயுத உதவிகள் கிடைத்துள்ளன. சுமார் 51.8 பில்லியன் டாலர் ஐரோப்பிய யூனியனிலிருந்தும், 47.8 பில்லியன் டாலர் அமெரிக்காவிலிருந்தும், இன்னும் யு.கே, கானடா, மற்றும் உள்ள சிறு குறு நாடுகளின் பங்களிப்பால்தான், உக்ரைன் சளைக்காமல் போரிடுகிறது.

இந்நிலையில் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, உக்ரைன் எல்லையில் ஏராளமான படை வீரர்களைக் குவித்து வருகிறது. இந்தப் போரில் இது வரை, சுமார் 1,00,000 போர் வீரர்களை ரஷ்யா இழந்திருந்தாலும், தற்போது உக்ரைன் எல்லையில் சுமார் 5,00,000 போர் வீரர்களை நிறுத்தியிருப்பதனை, செயற்கைக் கோள் படங்கள் உறுதிப் படுத்தியிருக்கின்றன.

F16 விமானங்கள் குறித்துப் பேசுவதற்காக, ஃப்ரான்ஸ் சென்றுள்ள, உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர், 'ஓலெக்ஸி ரெஸ்னிகோவ்' கடந்த செப்டம்பரில் 3,00,000 துருப்புகளைக் குவித்த ரஷ்யா, தற்போது, 5,00,000 துருப்புகளைக் குவித்திருக்கிறது எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், "கிழக்கு மற்றும் மேற்குப் பகுதி எல்லையில் ஏற்கனவே தீவிர தாக்குதலை ரஷ்யா நடத்தியிருக்கிறது. தற்போது அங்குதான் படைகள் குவிக்கப்பட்டிருக்கிறன. எதிரி நாட்டை நாங்கள் குறைத்து, மதிப்பிடவில்லை. 3,00,000 போர் வீரர்களை நிறுத்தியிருப்பதாக ரஷ்யா அதிகாரபூர்வமாக அறிவித்தாலும், அங்கே 5,00,000 துருப்புகள் குவித்திருப்பதை நாங்கள் அறிவோம்" என்று கூறியிருக்கிறார்

எனவே வரும் நாட்களில் போர் அதிதீவிரமடையும் என எதிர்ப்பார்க்கலாம்.உயிர்களைப் பலி கொண்டு, உருக்குலைந்து எரிந்த, சாம்பல் மேடுகளின் மேல், யாருக்காக சாம்ராஜ்யம் அமைக்கப் போகிறாரார்களோ? தெரியவில்லை.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com