உக்ரைன் போரில் திருப்பம்: ரஷ்யா வசமிருந்த கிரீமியா பாலத்தில் வெடிப்பு, 2 பேர் பலி!

மாதிரி படம்
மாதிரி படம்

க்ரைன் - ரஷ்யா போரில் முக்கிய திருப்பமாக கிரீமியா பாலத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைனிடம் இருந்து 2014ஆம் ஆண்டில் கிரீமியாவைக் கைப்பற்றிக்கொண்ட ரஷ்யா, அதை தன்னுடைய பகுதியாகவும் அறிவித்துக் கொண்டது. அதை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ரஷ்ய இனத்தவர் அடர்த்தியாக வசிக்கும் கிரிமீயாவில் உள்ள சட்டமன்றங்களில் தீர்மானம் இயற்றி, ரஷ்யாவின் இருப்பை ஏற்றுக்கொள்ளவும் செய்தனர். அதைத் தொடர்ந்து அங்கு ரஷ்ய அரசாங்கத்தின் நிர்வாகமே நடந்து வருகிறது.

ரஷ்யாவின் பெரும்பகுதி நிலப்பரப்புக்கும் தீபகற்பமான கிரீமியாவுக்கும் இடையே, கடலுக்குள் 19 கிமீ தொலைவுக்கு பாலம் அமைக்கப்பட்டது. இதன் வழியாகத்தான் கிரிமீயத் தீபகற்பப் பகுதிக்கு உணவு, எரிபொருள்கள், வேறு பொருள்களை எடுத்துச் செல்கின்றனர். குறிப்பாக அங்குள்ள செவஸ்தாபோல் துறைமுகமானது, வரலாற்று ரீதியாக கருங்கடலில் உள்ள ரஷ்யப் படையின் தளமாக இருந்துவரும் நிலையில், அதன் பூகோள கேந்திர முக்கியத்துவம் இந்தப் போரிலும் தொடர்கிறது.

இந்நிலையில், இந்தப் பாலத்தின் வழியாக தற்போதைக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றும் 145ஆவது தூண் உள்ள இடத்தில் அவசர நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் கிரிமீயாவின் ஆளுநர் செர்கெய் அக்ஸ்யோனவ் தெரிவித்துள்ளார்.

கிரிமீயாவுக்கு சுற்றுப்பயணம் வந்து, பாலத்தில் நிறுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் கிரிமீய அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்ய நடவடிக்கை எடுப்பதாக டாஸ் செய்தி முகமையிடம் ரஷ்ய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பாலத்தின் உக்ரைன் பகுதி சேதம் அடைந்துள்ளது என்று ரஷ்யாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் உறுதிப்படுத்தி இருக்கிறார். ஆனால், பாலத்தின் தூண்கள் சேதம் அடைந்துள்ளனவா என்பதைப் பற்றி அவர் குறிப்பாக எதையும் கூறவில்லை. இதனிடையே, பாலம் கடுமையாக சேதம் அடைந்துள்ளதாக சமூக ஊடகங்களில் படங்களும் காணொலிகளும் வெளியாகியுள்ளன. பன்னாட்டு செய்தி முகமைகள் எதனாலும் உண்மையான தகவலை உறுதிப்படுத்த முடியாத நிலைதான் இப்போதைக்கு இருக்கிறது.

முன்னதாக, கடந்த அக்டோபரில் இந்தப் பாலத்தின் மீது பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதையடுத்து இப்போது தாக்கப்பட்டுள்ளது. கிரிமீயாவுக்கு ரஷ்யாவிலிருந்து இதே பாலத்துக்கு இணையாக ரயில்வழியாகவும் போக்குவரத்து நடந்துவருகிறது. உக்ரைன் அதிகாரபூர்வமாக தாக்குதலுக்குப் பொறுப்பேற்காத போதும், பிபிசி ஊடகத்துக்குப் பேசிய உக்ரைன் தரப்பு, தரையிலிருந்து அனுப்பப்பட்ட டிரோன்கள் மூலம் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான போரில் ரஷ்யத் தரப்பின் முக்கிய போக்குவரத்து வழியாக இருந்துவரும் இந்தப் பாலம், தாக்கப்பட்டிருப்பது ரஷ்யத் தரப்புக்கு முக்கிய பின்னடைவாகவே அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com