கருங்கடல் வழியாக தானியக் கப்பல்கள் பயணம் செய்வது இனி சிக்கல்தான்!

கருங்கடல் வழியாக தானியக் கப்பல்கள் பயணம் செய்வது இனி சிக்கல்தான்!

க்ரைன் போர்க் களத்தில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுவரும் நிலையில், கருங்கடல் வழியாக செல்லும் தானியக் கப்பல்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தர முடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் பலவும் கோதுமை உட்பட்ட தானியங்களுக்காக ரஷ்யாவையும் உக்ரைனையுமே சார்ந்து இருக்கின்றன. உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை மையமாக வைத்து, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பு ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனை கொம்பு சீவி விட்டு வந்தது. அதற்குப் பதிலாக ரஷ்ய இனத்தவர் அதிகமாக வசிக்கும் கிரீமியாவை 2014ஆம் ஆண்டில் புட்டின் அரசு வலிந்து கைப்பற்றிக் கொண்டது. அப்போதிருந்து உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் பிரச்னை நீடித்துவருகிறது.

இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட கருங்கடல் பகுதி வழியாகத்தான் உக்ரைனில் இருந்து தானியங்கள் கொண்டுசெல்லப்பட்டு வந்தன. இதில் ஏதும் சிக்கல் ஆகிவிடக் கூடாது என்பதற்காக, ஐ நா சபையும் துருக்கி நாடும் இணைந்து சமாதான உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தின. அதன்படி இரு நாடுகளும் எந்தப் பிணக்கும் செய்யாமல் தானியப் போக்குவரத்து நல்லபடியாக நடந்துவந்தது.

சில நாள்களுக்கு முன்னர் ரஷ்யாவின் பெருநிலப் பகுதியையும் கிரீமியா தீபகற்பத்தையும் இணைக்கும் கடல் பாலத்தை, உக்ரைன் படை தாக்கியது. அதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்; அவர்களின் 16 வயது மகள் படுகாயம் அடைந்தார். அதற்குப் பதிலடியாக ரஷ்யா உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தியது.உக்ரைனில் இருந்து தானியங்களைக் கொண்டுசெல்லும் துறைமுகங்களில் ஒடேசா முக்கியமானது எனும் நிலையில், தானிய உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிரீமியா பாலம் தாக்கப்பட்ட திங்கள் அன்றே தானியப் போக்குவரத்து உடன்படிக்கையில் இருந்து விலகிக்கொள்வதாக ரஷ்யா அறிவித்தது. ஐநா சபை தரப்பிலும் துருக்கி அரசுத் தரப்பிலும் ரஷ்யா மீண்டும் தானியப் போக்குவரத்துக்கு ஒத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தன.ஆனால்,  உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியும், ரஷ்யத் தரப்பைச் சேர்க்காமல் தானியங்களை வெளிநாடுகளுக்குக் கொண்டுசெல்ல வழி கண்டுபிடிப்பதே சரியாக இருக்கும் என்று கூறினார்.

முறைப்படியான பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமல் போகுமானால், கருங்கடல் பகுதியில் இத்தகைய ஆபத்தான தாக்குதல்களுக்கும் வாய்ப்பு உண்டு என கிரெம்ளின் அதிகாரி திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் துருக்கியின் வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிதானைத் தொடர்புகொண்டு தங்கள் நிலையை எடுத்துக்கூறினார். கருங்கடல் பகுதியில் வர்த்தகக் கப்பல்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை அளிக்க முடியாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

தானியக் கப்பல் போக்குவரத்து எனக் கூறிக்கொண்டு, போர்த் தளவாடங்களை எடுத்துச்செல்ல முயல்வதை ரஷ்யா அனுமதிக்காது என்றும் கிரெம்ளின் அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.ரஷ்யாவால் தாக்கப்பட்ட ஒடேசா துறைமுகப் பகுதியில் இருந்து கடந்த ஆண்டில் மட்டும், ர்ஷ்யா- உக்ரைன் இடையிலான உடன்பாட்டின்படி, 3 கோடியே 20 இலட்சம் டன் தானியங்கள் கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.  
 உலக நாடுகள் குறிப்பாக கோதுமையை முக்கிய உணவாகக் கொண்ட ஐரோப்பிய நாடுகள், இந்தப் பிரச்னையால் உணவுப் பொருள் தட்டுப்பாட்டுக்கும் விலை உயர்வுக்கும் ஆளாகக் கூடும் என அஞ்சப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com